

பாலியல் வழக்கில் கைதான காசி தன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மகன் காசி மீது கோட்டார் போலீஸார் ஏப்ரல் 24-ல் பெண்கள் மீது வன்கொடுமை சட்டம், கம்ப்யூட்டர் குற்றத் தடுப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காசியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஏப்ரல் 29-ல் குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காசி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காசி மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. காசி தன் மீதான வழக்கில் ஜாமீன் கோரி எந்த நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யவில்லை.
அப்படியிருக்கும் போது ஜாமீனில் வெளிவர வாய்ப்பிருப்பதாக கூறி காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம். எனவே காசி மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.