அசாம் எண்ணெய்க் கிணறு தீ விபத்துப் போல காவிரிப் படுகையிலும் நடக்கலாம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு எச்சரிக்கை

அசாம் எண்ணெய்க் கிணறு தீ விபத்துப் போல காவிரிப் படுகையிலும் நடக்கலாம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு எச்சரிக்கை
Updated on
1 min read

அசாம் மாநிலத்தில் தின்சுகியா மாவட்டத்தில், பாக்ஜன் என்ற இடத்தில் இருக்கும் ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறு கடந்த மே மாதம் 27-ம் தேதி திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாமல் ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனமும், அந்த மாநில அரசும் திணறிக் கொண்டுள்ளன.

அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள குடியிருப்புகளிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க ஆலோசனைகளை அளிக்க சிங்கப்பூரிலிருந்து 3 வல்லுநர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். தீயைக் கட்டுக்குள் கொண்டுவர மேலும் 4 வாரங்கள் ஆகும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் எண்ணெய்க் கிணறு பற்றி எரிவது தமிழகத்தின் காவிரிப் படுக்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன்.

இதுகுறித்து இந்து தமிழ் திசை இணையத்திடம் பேசிய அவர், “காவிரிப் படுகையில் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக எண்ணெய்க் கிணறுகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அமைத்துள்ளது. இக்கிணறுகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தமிழக அரசு இக்கிணறுகளைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது. அவற்றுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து எண்ணெய் நிறுவனங்களை உனடியாக வெளியேற்ற வேண்டும்.

அசாம் மாநிலத்தில் நடைபெற்றது போல இங்கு ஏதும் நடக்காது என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. அசாம் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ போல எந்த எண்ணெய்க் கிணற்றிலும் எப்போது வேண்டுமானாலும் தீ விபத்து ஏற்படக்கூடும். நம் வாழ்விடத்தைப் பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியம். எனவே காவிரிப் படுகையில் உள்ள நிறுவனங்களை வெளியேற்றுவதும், கிணறுகளை நிரந்தரமாக மூடுவதும் மட்டுமே மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in