

திருநெல்வேலியில் சலூன்கடை உரிமையாளர், டோல்கேட் ஊழியர் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 400 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர்களில் 346 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருந்தார். 53 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் திருநெல்வேலியில் மேலும் 3 பேருக்கு நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பில் சலூன் கடை உரிமையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
அப்பகுதியிலும், அவர் வசிக்கும் சிவபுரம் பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதுபோல் நாங்குநேரி டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.