Last Updated : 10 Jun, 2020 04:13 PM

 

Published : 10 Jun 2020 04:13 PM
Last Updated : 10 Jun 2020 04:13 PM

ஆளுநர் கிரண்பேடியின் தவறான முடிவால் புதுச்சேரியின் பொருளாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது; முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு 

கிரண்பேடி - நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தவறான முடிவால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூன் 10) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் திமுகவின் தூணாக இருந்தவர். குறிப்பாக, திராவிட கொள்கையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது மறைவுக்கு ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளேன். அவர் என்னோடு நெருங்கி பழங்கியவர். அவரது மறைவு திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

நேற்றைய தினம் பாஜகவை சேர்ந்தவர்கள் ரெட்டியார்பாளையம் பகுதியில் துணை சபாநாயகர் பாலன் அலுவலகத்துக்கு முன்பாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் ஊரடங்கு விதிமுறைகளையும், 144 தடை உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வரும்போது அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, நீட் தேர்வை கொண்டு வருவதன் மூலம் புதுச்சேரியில் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெறுவதற்கு ஏதுவான சூழல் இருக்காது என்று கூறியிருந்தோம்.

இருந்தாலும் நீட் தேர்வை மத்திய அரசு திணித்தது. இதுசம்பந்தமாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளன. நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களை எடுத்துக் கொண்டு மீதியுள்ள 50 சதவீத இடத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கிறோம். மாநில அரசை பொறுத்தவரை இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்கள், மழைவாழ் மக்களுக்கு மாநில அரசின் சார்பாக இடஒதுக்கீடு வழங்குகிறோம். ஆனால், மத்திய அரசு இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்கவில்லை. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் கல்வி நிறுவனங்களிலும், வேலைகளிலும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இதுசம்பந்தமாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள், அதனை பொதுப்பட்டியலில் சேர்க்கிறார்கள், இதுசம்பந்தமாக புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுசம்பந்தமாக நானும் சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்தேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனை பார்க்கும்போது, மத்திய அரசுக்கு நாம் ஒதுக்கிய 50 சதவீத இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை என்பது தெரிகிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகவும், உதாசீனப்படுத்துவதாகவும் உள்ளது. இது அந்த மக்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப்பெரிய அநீதியாகும்.

ஏற்கெனவே தமிழக அரசு மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதேபோல் திமுக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் ஓபிசி, எம்பிசி, மலைவாழ் மக்கள் இருக்கின்ற காரணத்தால், அவர்களது உரிமை பாதிக்கப்படக் கூடாது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை அழைத்து ஆலோசனை செய்தேன்.

அந்த மக்களுக்கு இளநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன் மூலமாக சமூக நீதி காக்கப்படும். அந்த சமுதாய மக்கள் மேலே வருவதற்கான வாய்ப்பை கொண்டுவர முடியும்.

இன்று உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களால் வியாபாரம் பெருகும். இப்போது எல்லையை மூடிவிட்டதால் மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. தமிழகத்தை விட மது விலையை அதிகமாக உயர்த்தியதால் மதுக்கடைகளின் வியாபாரமும் குறைந்துவிட்டது.

நாம் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அரசுக்கு வருமானத்தைக் கொண்டு வர வேண்டும் என திட்டங்களை போட்டால், அதனை தடுத்து நிறுத்துகிற வேலையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்த்துக் கொண்டு இருக்கிறார். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் மதுக்கடைக்கு வந்தால் கரோனா வரும் என ஆளுநர் கூறுகிறார்.

நாம் ஏற்கெனவே எல்லையை மூடி உள்ளோம். அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். அப்படி இருந்தாலும் கூட ஆளுநரின் அடாவடித்தனத்தால் நம்முடைய வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது. மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினோம்.

மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நிறைவேற்ற சொன்னார்கள். நாம் செய்தோம். வருமானம் குறைந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சாலை போடுவது போன்ற பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு நிதி ஆதாரம் இல்லாமல் செய்ய முடியாது.

ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கினால் கூட அதனை திருப்பி கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, நாம் சிறிதளவு விலையை குறைத்தால் வியாபாரம் பெருகும். அரசுக்கு வருவாய் வரும் என்று சென்னோம். அதற்கு செவி சாய்க்காமல் ஆளுநரின் தவறான முடிவால் இன்று புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வருமானங்கள் அரசுக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம். குறிப்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் கடனை தவணை முறையில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களின் வருவாய் பாதிக்கின்ற காரணத்தால் இழப்பீடு அளிக்க வேண்டும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கியில் கடன் பெறுவதற்கான ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.

ஆனால், மத்திய அரசு ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி 3 மாதத்துக்குக் கொடுப்பதாக ஒரே ஒரு திட்டத்தை அறிவித்ததை தவிர மாநிலங்களுக்கு வேறு எந்த உதவியையும் செய்யவில்லை. கரோனா தொற்று பாதிப்பு சமயத்தில் தேவையான வென்டிலேட்டர் வாங்கவும், பிபிஇ பாதுகாப்பு கவசங்கள், கவச உடைகள், மானிட்டர், என்-95 முகக்கவசம், தேவையான மருந்துகள் வாங்கவும், மருத்துவ நிலையங்களின் கட்டமைப்பை சரிசெய்யவும் நிதி கேட்டோம். அதற்கும் மத்திய அரசு உதவி செய்யவில்லை.

ரூ.995 கோடி கேட்டோம், கொடுக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை கிடைக்க வேண்டிய பாக்கியையும் கொடுக்கவில்லை. இதனால் புதுச்சேரி மாநிலம் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இதற்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கோடி எடுத்து அதில் மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கரோனா தொற்றை தடுத்து நிறுத்தவும், தேவையான பொருட்கள் வாங்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தேவையான திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு உதவ வேண்டும். ஆனால், மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவ தயாராக இல்லை. இது மிகப்பெரிய வருத்தத்தைத் தருகிறது"

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x