Published : 10 Jun 2020 05:30 PM
Last Updated : 10 Jun 2020 05:30 PM

பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்; 2 நாளில் வந்துவிடுவேன்: ஸ்டாலினிடம் கடைசிப் பேச்சு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜெ.அன்பழகன் தனது 62-வது பிறந்த நாளில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறியிருந்தார். ஆனால், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ம் தேதி அன்று 2 நாளில் வந்துவிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் சொல்லிவிட்டு சிகிச்சைக்குச் சென்றவர் சடலமாகத்தான் திரும்பினார்.

கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கட்சிப் பணியில் ஜெ.அன்பழகன் தீவிரம் காட்டி வந்தார். பொதுமக்களை நேரடியாக சந்தித்து நிவாரண உதவிகள் வழங்குவது, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் பயனாளிகளுக்கு உதவி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததை உடன்பிறப்புகள் சொல்லிச் சொல்லிக் கலங்குகின்றனர்.

ஜெ.அன்பழகனின் பிறப்பும் இறப்பும் ஒரே நாளில் அமைந்துவிட்டது.

திமுகவில் மனதில் பட்டதை பட்டெனப் பேசும் குணம் கொண்டோர் அவ்வப்போது தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டே வந்துள்ளனர். அதில் முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகம் வரிசையில் வந்தவர் ஜெ.அன்பழகன். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோரால் அன்பு என அழைக்கப்பட்டவர் ஜெ.அன்பழகன்.

தனது மனதில் பட்டதை அப்போதைய தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் ஸ்டாலின் இருவரிடமும் பேசும் உரிமை அன்பழகனுக்கு இருந்தது. தி.நகரில் ஆரம்பக் காலத்தில் திமுகவை வளர்த்தவர்களில் முன்னணி நிர்வாகியாகத் திகழ்ந்தவர் ஜெயராமன். இவரை பழக்கடை ஜெயராமன் என்றுதான் மற்றவர்கள் அழைப்பர். 70களில் திமுகவில் பழக்கடை ஜெயராமன், அதிமுகவில் பழக்கடை மூர்த்தி ஆகிய இருவரும் தி.நகரில் பிரபலம்.

தலைநகர் சென்னை திமுக முன்னோடிகளுக்கு ஒரு வாய்ப்பு. திமுக தலைவர் கருணாநிதியுடன் அவரது குடும்பத்தாருடன் எளிதில் பழக முடியும். அந்த வகையில் ஸ்டாலினைவிட 5 வயது இளையவரான ஜெ.அன்பழகன் திமுக குடும்பத்தில் ஒருவராகவே வளர்ந்தார். ஸ்டாலினின் இளவயது தோழராக ஜெ.அன்பழகன் திகழ்ந்தார். இளங்கலை பொருளாதாரம் படித்த அன்பழகன் கட்சியிலும் ஸ்டாலினைப் பின்பற்றி இயங்கினார்.

ஸ்டாலின், அன்பில் பொய்யாமொழி, ஜெ.அன்பழகன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் என திமுகவை அறிந்த அனைவருக்கும் தெரியும். ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான அன்பழகன் பொதுவெளியில் ஸ்டாலினிடம் தலைவர் என்கிற மதிப்புடனேயே நடந்து வந்தார்.

சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் காணொலிக் கூட்டம் ஜெ.அன்பழகன் கடைசியாகக் கலந்துகொண்ட கட்சியின் முக்கியமான கூட்டம் எனலாம். அதில் அன்பழகன் தலைமைக்கு வைத்த கோரிக்கையும், விமர்சனமும் கட்சியில் உள்ளவர்களால் சிலாகித்துப் பேசப்படுகிறது.

கடந்த மாத இறுதியில் திருவல்லிக்கேணியில் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெ.அன்பழகனுக்கு சளி, இருமல் இருந்துள்ளது. மருத்துவமனைக்குச் செல்லுமாறு தொண்டர்களும், குடும்பத்தாரும் கேட்டுக்கொண்டபோது, ''தலைவர் பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி வருகிறது. அதை முடித்துவிட்டுப் போகிறேன். இப்போது போனால் அட்மிட் ஆகு என்று சொல்லிட்டால் என்ன செய்வது?'' என ஜூன் 1-ம் தேதி கூறியுள்ளார் அன்பழகன்.

ஆனால், இயற்கையின் வேகம் அவர் நினைப்பை மாற்றிவிட்டது. 2-ம் தேதி சளி, இருமல் அதிகமாகி மூச்சுத்திணறலும் அதிகமாகியுள்ளது. இனி முடியாது என்கிற நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு போன் செய்து, ''லேசாக மூச்சுத்திணறல் உள்ளது. மருத்துவமனைக்குப் போகிறேன், நாளை தலைவர் பிறந்த நாளை பகுதி நிர்வாகிகள் பார்த்துக்கொள்வார்கள். 2 நாளில் நான் வந்துவிடுகிறேன்'' எனத் தெரிவித்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவரின் உயிரற்ற உடலைத் தான் அனைவரும் பார்க்க முடிந்தது.

திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

“அன்பழகன் எப்போதும் எல்லோரிடமும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். 'சரி பார்த்துக்கலாம் விடு' என்பதே அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை. கட்சி மேலிடம் கொடுக்கும் அழுத்தத்தைக் கீழுள்ள நிர்வாகிகள் தலையில் அப்படியே போடாமல் அவர்களால் இயன்றதைச் செய்யவைத்து அதைத் தன்னுடைய உழைப்பால் ஈடுகட்டி சரிசெய்யும் நிர்வாகியாக இருந்தார்.

கட்சியில் தவறு செய்து கட்சித்தலைமையில் தண்டனை நிச்சயம் உண்டு என்ற நிலையில் வரும் தனக்குக் கீழுள்ள நிர்வாகிகளை அரவணைத்து, 'சரி, நீ போ நான் தலைவர் கிட்ட பேசிக்கிறேன்' என்று அனுப்பிவைப்பார். அவரும் தனது தவறை உணர்ந்து கட்சி வேலை பார்க்கப் போவார். அன்பழகன் தலைமையிடம் அந்த நிர்வாகியின் பிரச்சினையை எளிதாக்கி நடவடிக்கை வராமல் பார்த்துக்கொள்வார், கட்சித் தலைமை, கீழுள்ள நிர்வாகிகள்என இரு தரப்புக்கும் பாலமாக இருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருங்கிய தோழர். ஆனால், அவர் தனது தனித்துவமான இயல்பால் அதைப் பொதுவெளியில் காட்டிக்கொள்ளாமல் தளபதி, பின்னர் தலைவர் என்றே அழைத்து வந்தார். அவரது நெருக்கம் வெளியில் அதிகம் பேர் அறியாதது. அதேபோல் அவர் அதிரடியான நடவடிக்கையால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அன்பை அதிகம் பெற்றவராக இருந்தார்.

2011-ல் திமுக 23 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஜெயலலிதா வலுவான முதல்வராக அமர்ந்த நேரம். அவர் இருக்கும்போது சட்டப்பேரவையில் அனைவரும் பேசப் பயந்தபோது அன்பழகன் துணிச்சலாக வாதம் செய்து பல முறை வெளியேற்றப்பட்டார். அவரைப் பற்றி அப்போது திமுக தலைவர் கருணாநிதியிடம் சிலர் குறை சொன்னபோது, 'அன்பழகன் ஒருவன் தான் தைரியாமாக சண்டைபோடுகிறான். உங்கள் வேலையைப் பாருங்கள்' என அனுப்பியதாகச் சொல்வார்கள்.

அன்பழகன் மீது மறைந்த திமுக தலைவருக்கு அளவில்லா பாசம் உண்டு. காரணம், சென்னையில் கட்சிப் பணியில் அவரது வேகம் கருணாநிதிக்குப் பிடிக்கும். கட்சி சொல்லும் எந்தப் பணியையும் மாவட்டச் செயலாளராக சிறப்பாக முடித்துவிடுவார் அன்பழகன். திமுகவிலிருந்து வைகோ வெளியேறிய நேரம். திமுக அவ்வளவுதான் எனப் பலரும் கூறிவந்த நிலையில் ஸ்டாலினை வைத்து பிரம்மாண்ட கூட்டத்தை நடத்திக் காட்டினார் ஜெ.அன்பழகன்.

அதேபோன்று சென்னையில் அறிவாலயத்தில், ஒய்.எம்.சி.ஏவில், கே.கே.நகரில் நடந்த பிரம்மாண்டக் கூட்டங்களைச் சிறப்பாக நடத்திக்காட்டியவர் அன்பழகன். அவரது பிரம்மாண்ட செட் மேடை தமிழக திமுகவினரிடையே பிரபலம். திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்திற்கு அவரது கோபாலபுரம் இல்லம் போன்று செட் போட்டு அசத்தினார். தமிழக தலைமைச் செயலகம், அறிவாலயம், நாடாளுமன்றம் என அவரது மேடை செட் அலங்காரம் மற்ற மாவட்டச் செயலாளர்களைப் பிரமித்துப் பார்க்க வைக்கும்.

தேசியத் தலைவர்களின் கூட்டம், முரசொலி பவளவிழா, கருணாநிதி சிலை திறப்பு விழா அனைத்திலும் அவர் அதைச் செய்திருந்தார். அவரது இன்னொரு சிறப்பு ஆளுயர ஆப்பிள் மாலை. அன்பழகன் ஏற்பாடும் செய்யும் கூட்டம் என்றால் ஆப்பிள் மாலை நிச்சயம் எனப் பேசிக்கொள்வார்கள்.

அன்பழகன் தந்தையுடன் போட்டி அரசியல் நடத்திய பழக்கடை மூர்த்தி என்பவரும், ஜெயராமனும் ரங்கநாதன் தெருவில் பழக்கடை வைத்திருந்தனர். காலப்போக்கில் மூர்த்தியின் வாரிசுகள் பழக்கடையை எடுத்துவிட்டனர். ஆனால் தந்தையின் நினைவாக இன்றும் பழக்கடையை நடத்தி வருகிறார் அன்பழகன். திரைப்படத்துறை எனப் பல்வேறு துறைகளில் அன்பழகன் கால் பதித்தாலும் தந்தையின் நினைவாக அவர் நடத்திய சிறிய பழக்கடையை மூடக்கூடாது என கண்டிப்புடன் சொல்லி நடத்தி வந்தார் அன்பழகன்.

கருணாநிதியின் மீது அன்பழகனுக்கு மதிப்பும், பாசமும் உண்டு. அதேபோன்று அவரும் அன்பழகனின் மீது பெரிய அளவில் பாசம் வைத்திருந்தார். ஒருமுறை திமுக கூட்டத்தில் மின்சாரம் திருடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் என்ற முறையில் ஜெ.அன்பழகனை போலீஸார் கைது செய்து ஜாமீனும் வழங்காமல் அலைக்கழித்தனர்.

அப்போது அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் கருணாநிதி, தகவலறிந்து ஒரு சிறிய பையை கையில் எடுத்துக்கொண்டு நேராக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு காரை விடச்சொல்லி ஆணையர் அலுவலகம் எதிரில் சாலையில் அமரச் சென்றார். போலீஸார் அவரைச் சாலையில் அமரவிடாமல் நாற்காலி கொடுத்து அவரிடம் போலீஸார் மறியலைக் கைவிடப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அன்பழகனை விடுவித்தால் மட்டுமே நான் செல்வேன் என திமுக தலைவர் பிடிவாதம் பிடிக்க, மேலதிகாரிகள் அன்பழகனை ஜாமீனில் விடுவித்தனர். பின்னரே அவர் கிளம்பிச் சென்றார். இதுபோன்று கருணாநிதி போராட்டம் நடத்திய வெகு அரிதான நிகழ்வில் ஜெ.அன்பழகனும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கரோனாவைப் பார்த்து பல கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். ஆனால் அன்பழகன் மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். தனது தொகுதியான நோய்த்தொற்று அதிகமுள்ள திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த மாத இறுதியில் நிவாரண உதவி வழங்கினார்.

சமூக விலகல், முகக்கவசம் குறித்து எச்சரிக்கை உணர்வுடனே பணியாற்றி வந்தார் அன்பழகன். எது குறித்து மக்களுக்கு எச்சரித்தாரோ அதற்கே அவர் இரையாகும் நிலை உண்டாகிவிட்டது”.

இவ்வாறு திமுக மூத்த நிர்வாகி வருத்தம் தெரிவித்துப் பேசினார்.

திமுக மாவட்டச் செயலாளர் அன்பழகன் 2001-ம் ஆண்டு முதன்முதலில் தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2006-ம் ஆண்டு திமுக வென்று ஆட்சி அமைத்தாலும் அதே தி.நகர் தொகுதியில் அன்பழகன் தோல்வி அடைந்தார். தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதிக்கு இடம் மாறியதால் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி ஒன்றிணைக்கப்பட்டு திருவல்லிக்கேணி தொகுதியாக மாற்றப்பட்டது.

2011-ம் ஆண்டு தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் 23 உறுப்பினர்களே இருந்தாலும் அந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் பலமுறை ஜெ.அன்பழகன் பேசியது அனைவராலும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திருவல்லிக்கேணி தொகுதியில் அன்பழகன் வெற்றி பெற்றார். இம்முறையும் சட்டப்பேரவை விவாதத்தில் அன்பழகன் பணி சிறப்பாக இருந்தது. அவருடைய பல விவாதங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலை இருந்தது. அவரது கடைசி சட்டப்பேரவை நிகழ்வில் அவரது வாதத்தைப் பொறுக்க முடியாமல் கூட்டத்தொடர் முழுவதும் அவரை சஸ்பெண்ட் செய்தார் சட்டப்பேரவைத் தலைவர்.

ஆனால் அவர் மீதுள்ள கடும் நடவடிக்கையைக் குறைக்க திமுக தலைவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் அவர் கலந்துகொள்ளும் கடைசிக் கூட்டமே அதுவாகத்தான் இருக்கப்போகிறது என்ற சோக நிகழ்வை யாரும் அன்று அறியவில்லை.

உடல் நிலையைக் காரணம் காட்டி என்னைப் பொதுவெளிக்கு வரக்கூடாது என கண்டிப்பாகச் சொன்ன அன்பழகன், அவர் கட்சியின் முடிவையேற்று அதைக் கடைப்பிடிக்க முடியாமல் போனதை என்னவென்று சொல்வது என திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதைத்தான் இங்கு குறிப்பிட வேண்டும்.

அன்பழகன் பொதுவெளியில் இயங்குபவர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். கரோனா சமூக விலகல், முகக்கவசம், தனித்திருப்பதை கட்சியினர் அவசியம் கடைப்பிடித்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x