

ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைக்கு மாறாக கடன்தாரர்களிடம் இருந்து தவணைத் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு தவணைத் தொகை செலுத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் ரிசர்வ் வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதையும் மீறி, சில நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை உடனே செலுத்துமாறு வாடிக்கையாளர்களிடம் நிர்பந்தித்து வருகின்றன. செலுத்தத் தவறுவோருக்கு நிதி நிறுவனங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கண்டித்தும், இத்தகைய நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர், புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் அடுத்தடுத்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடடிக்கை எடுக்கப்படும் எனவும் புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 10) கூறுகையில், "கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள், நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் உட்பட கடன் வழங்கும் நிறுவனங்கள், வேளாண் கடன்கள், சில்லறை மற்றும் பயிர்க் கடன்கள் உட்பட அனைத்து விதமான பயிர்க் கடன்களுக்குமான மார்ச் முதல் ஆக்ஸ்ட் மாதங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்து மார்ச் 27-ம் தேதி அறிவித்துள்ளது.
இதற்கு மாறாக கடன்தாரர்களிடம் வங்கி மற்றும் நிறுவனங்களின் அலுவலர்கள் நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைக்கு மாறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.