

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை பெண் ஒப்பந்த பணியாளர் உள்ளிட்ட மேலும் 25 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் ஒப்பந்த பணியாளருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த பெண் பணியாளர் மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் பணியாற்றி வந்தார். அந்த வார்டில் சில நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்ற ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த வார்டில் பணியாற்றிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண் ஒப்பந்த பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் அதே மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தில் அவரது வீடு உள்ள பகுதி மூடி சீல் வைக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மூன்று பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு ஆத்தூரில் 9 பேர், காயல்பட்டினத்தில் 6 பேர் உள்பட மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 27 பேர் குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.