Last Updated : 10 Jun, 2020 01:15 PM

 

Published : 10 Jun 2020 01:15 PM
Last Updated : 10 Jun 2020 01:15 PM

புதுச்சேரியில் இறந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு கரோனா

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இறந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் குமளம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது மதிக்கத்தக்க ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த 4 ஆம் தேதி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியில் வசிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். பின்னர் அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலைத் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூன் 10) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்தார். பின்னர் அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நான் அரசு மருத்துவமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்போது, மருத்துவமனை முழுவதும் உடனடியாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டேன். அதன்படி மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு மூடப்பட்டது. கரோனாவால் இறந்த நோயாளியை அடக்கம் செய்வதற்கான அங்கிகளையும், மருத்துவ உபகரணங்களையும் பார்வையிட்டேன். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே கரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட சிறிய தவறு போன்று இப்போது எந்தத் தவறும் நடைபெறக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். முதியவர் இறந்தது குறித்து அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரசே அடக்கம் செய்யும்படி தெரிவித்துவிட்டனர். அதன்படி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, "விழுப்புரத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் தற்காலிக முகவரியாக புதுச்சேரி முகவரியைக் கொடுத்து கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவர் இருதய நோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 8 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். சந்தேகத்தின் பேரில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. அவரது உடலை பேக்கிங் செய்து உள்ளாட்சித்துறையிடம் ஒப்படைத்துவிடுவோம். பின்னர் அவர்கள் உடலை அடக்கம் செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த நபர் கரோனா தொற்றுடன் இறந்த நிலையில், தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x