

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்
ஜெ.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக திமுகவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக
'ஒன்றிணைவோம் வா' என்று திமுக தலைவர் விடுத்த அழைப்பினை ஏற்று, உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மறைத்து, கரோனா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன் ஜெ.அன்பழகன், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சூரன், தலைவரின் கட்டளை என்றால், கணப் பொழுதில் உயிரையும் பணயம் வைக்கும் உத்தமத் தொண்டன் ஆவார்.
ஜெ.அன்பழகன், 'நெற்றிக் கண் கட்டினும் குற்றம் குற்றமே' என்று பகைவர் கூட்டத்தை எச்சரிப்பவர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சண்டமாருதமாய் முழங்கியவர்.
அவரது தந்தை 'பழக்கடை' ஜெயராமன், சென்னை மாநகரில் திமுகவை வளர்த்த முன்னோடிச் செயல்வீரர்களுள் ஒருவர் ஆவார்.
1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஜெ.அன்பழகன், அன்றைய திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலினையும், என்னையும் வைத்து, எம்ஜிஆர் நகரில் கொட்டிய மழைக்கு நடுவே பொதுக்கூட்டத்தை நடத்தி, எங்கள் இருவருக்கும் தங்கக் கணையாழி அணிவித்தார்.
மாறாத மந்தகாசப் புன்னகையோடு, மாற்றாரையும் ஈர்க்கின்ற அன்பு தவழும் புன்சிரிப்போடு, 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்று இயக்கத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு, கட்சியின் புகழ் ஓங்குவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்தியவாறு உயிர் நீத்ததன் மூலம், திமுகவின் தியாக வரலாற்றில் அழியாத புகழ் இடத்தைப் பெற்றுவிட்டார் அன்பழகன்.
இந்தக் கொடுந்துயரைத் தாங்க முடியாமல் திமுக தலைவர் தவிக்கின்றார். அவருக்கும், அன்பழகனின் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் ஆறுதல் தேறுதல் கூற முடியாது என்ற நிலையில், மதிமுகவின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.
கனிமொழி, மக்களவை உறுப்பினர், திமுக
ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.
கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
திமுகவின் சென்னை மாவட்டத் தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது. தனது தந்தை பழக்கடை ஜெயராமன் காலத்திலிருந்து திமுகவிலேயே கொள்கைச் செடியாக வளர்ந்து, மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், கட்சிக் கூட்டமானாலும், சட்டப்பேரவைக் கூட்டமானாலும், எப்பிரச்சினையையும் தெளிவுடனும், துணிவுடனும் பேசி, செயல்பட்ட ஒப்பற்ற ஒரு செயல்வீரர் ஜெ.அன்பழகன் ஆவார்.
கடந்த சில நாள்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்து மீண்டும் குணமடைந்தார் என்ற செய்தி நமக்கெல்லாம் ஆறுதல் தந்தது. என்றாலும், பெரியார் அடிக்கடி கூறுவதுபோல், இயற்கையின் கோணல் புத்தி அவரைப் பறித்துக் கொண்டது, இறுதி வரை தொண்டாற்றியவர் அவர்.
இது திமுகவுக்கு மட்டும் இழப்பு அல்ல; சிறந்த ஜனநாயகவாதியாகக் கடமையாற்றிட்ட வீரனின் இழப்பு என்பதால், ஜனநாயகத்திற்கும், பொதுவாழ்வுக்கும் ஈடற்ற இழப்பு.
சீரிய பண்பாளர்; எப்போதும் நம்மிடம் தனது தந்தையின் மிசா காலத்து நண்பர் என்ற மரியாதை கலந்த அன்புடனும், பண்புடனும் பழகிய பான்மைமிக்க ஒரு சகோதரன்.
அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக தலைவருக்கும், திமுகவுக்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திமுகவின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் மறைவு அதிர்ச்சியளிக்கின்றது.
கொடிய கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஒருங்கிணைவோம் வா' என்ற என்ற திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்களை ஜெ.அன்பழகன் வழங்கியதை தினசரி ஊடகங்களில் பார்த்து மகிழ்ந்தோம்.
கடந்த 2-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. அவரது உடல்நிலை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வழியாக அவ்வப்போது விசாரித்தபோது, 'முன்னேறி வருகிறார். அபாய கட்டத்திலிருந்து தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நலம் பெற்று மீண்டும் நம்மோடு பணியாற்ற வருவார்' என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தார்.
நமது நம்பிக்கையைப் பொய்யாக்கி, கரோனா என்ற கொடிய நோய் பழி வாங்கிவிட்டது. மருத்துவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போய் விட்டது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
பதினைந்து ஆண்டுகளாக திமுகவின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி, மாவட்ட மக்களிடத்தில் பேரன்பைப் பெற்றதன் விளைவாக மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார்.
மக்கள் பணியாற்றி வந்த ஜெ.அன்பழகன் மேலும் தொடர்ந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய் தனது இளம் வயதில் தனது பிறந்த நாளில் இன்று கரோனாவின் கொடிய தொற்றுக்குப் பலியாகியுள்ளார். பிறந்த நாளும், மறைந்த நாளும் ஒரே நாளாகி விட்டது.
ஜெ. அன்பழகனுக்கு அஞ்சலி தெரிவிப்பதுடன் அன்பழகன் மறைவால் மிகுந்த துயருற்றுள்ள திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக தொண்டர்களுக்கும், அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தாருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
ஜெ.அன்பழகன் காலமான தகவல் மிகுந்த கவலையளிக்கிறது. அவர் கரோனாவுக்கு இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரவிக்குமார், எம்.பி., விசிக
மீண்டுவிடுவார் என உறுதியாக நம்பினேன். இப்படி ஆகுமென நினைக்கவில்லை. ஜெ.அன்பழகனுக்கு என் அஞ்சலி
ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
ஜெ.அன்பழகனின் மறைவு அவர் சார்ந்து இருக்கின்ற திமுகவுக்கும் தொகுதிக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.
கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்தவர். சிறந்த பண்பாளர். அவரை இழந்து வாடும் திமுகவினருக்கும் தொகுதி மக்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
கரோனா கொடியது, எவரையும் மடியச் செய்வது என்ற வகையில்தான், ஜெ.அன்பழகனையும் பழி தீர்த்திருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திமுக தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பின் என் இதயத்தின் ஆழத்திலிருந்து இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
பத்தாண்டுக் காலம் சட்டப்பேரவையில் அன்பழகனுடன் பணியாற்றிய தோழமையால், பழகுதற்கினிய மாபெரும் அவரது பெருந்தன்மையை உணர்ந்தேன். அதன் மூலம் மறப்பதற்கில்லா அரிய நண்பராக நிரந்தரமாக என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார். ஆறாத் துயரில், மீளாத் துயரில் ஆழ்த்துகின்ற அன்பழகனின் அகால மறைவை எப்படித் தாங்குவது?
குஷ்பு, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
ஜெ.அன்பழகனின் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த துயருற்றேன். 5 ஆண்டுகள் திமுகவில் இருந்தபோது, அவரின் கடின உழைப்பை அறிந்தேன். கேள்விகளை எழுப்ப அஞ்சாதவர், நல்லவற்றுக்காக துணை நின்றவர். ஏழைகளுக்கு எப்போதும் உதவுபவர். ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா!