Last Updated : 10 Jun, 2020 11:47 AM

 

Published : 10 Jun 2020 11:47 AM
Last Updated : 10 Jun 2020 11:47 AM

கரோனாவைச் சரியாகக் கையாள்கின்றனவா தனியார் மருத்துவமனைகள்?

கரோனா சிகிச்சைக்கென தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. ஆனால், இதுவரையில் அது நடைமுறைக்கு வரவில்லை. சில தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்ததைக் காட்டிலும் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கெனவே மதுரையில் உள்ள தனியார் செயற்கைக் கருத்தரித்தல் மையம் ஒன்று, மருத்துவமனைக்கு வந்த பார்வையாளர்களின் கையில் நான்கு சொட்டு சானிடைசர் விட்டதற்காக 100 ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையானது நினைவிருக்கலாம்.

நாம் போராட வேண்டியது கரோனாவுடன் தானே ஒழிய, நோயாளிகளுடன் அல்ல என்று அரசு திரும்பத் திரும்பச் சொல்கிறது. ஆனால், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் பலரைத் தனியார் மருத்துவமனைகள் திருப்பி அனுப்பும் செயல்கள் தொடர்கின்றன. பிரசவத்துக்காக வரும் பெண்களையும் இதுபோல நடத்துவது தொடர்கிறது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது. 4 நாட்கள் கழித்து வீடு திரும்பிய அந்தப் பெண்ணுக்கு, அடுத்த சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே பதறிப்போய் அவரது பெற்றோர் அந்தப் பெண்ணை மகப்பேறு நடந்த அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், பதறிப்போன மருத்துவமனை அவரை விரட்டாத குறையாக அனுப்பிவிட்டது. அழுத்தம் கொடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது, சாதாரண சிறுநீர்த் தொற்று காரணமாகவே அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

டி.வி. செய்தி வாசிப்பாளர் வரதராஜன், தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அலைய நேரிட்டதாகச் சொன்னது கூட தனியார் மருத்துவமனைகள் மீதான புகார்தான். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “நியாயமாக, அரசு மருத்துவமனைகளில் அப்படியான புகார்கள் எதுவும் இல்லை. வரதராஜன் குறிப்பிடுவது தனியார் மருத்துவமனைகளை என்று நினைக்கிறேன். அவர் பெயர் குறிப்பிட்டுச் சொன்னால் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம். அதைவிடுத்து மிரட்டும் தொனியில் பேசியது தனியார் மருத்துவமனைகளைப் பாதுகாக்கும் படையின் முன்கள வீரர்களாக அரசு இயந்திரமே நிற்கிறதோ என்கிற சந்தேகத்தை வரவழைக்கிறது.

உலகின் பல நாடுகள் இந்த பேரிடர்க் காலத்தில் மக்களின் உயிர் காக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து தனியார் மருத்துவமனைகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. குறைந்தபட்சம் 50 சதவிகிதப் படுக்கைகளையாவது அரசின் வசம் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், நம் நாட்டில்?

எல்லாவற்றுக்கும் மேலாக, தினமும் மாலையில் தமிழ்நாடு அரசு வெளியிடுகிற செய்திக் குறிப்பில் இறந்தோர் பட்டியலும் இடம்பெறுகிறது. அதில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 38 வயது ஆண், இத்தனை நாட்கள் சிகிச்சை பெற்று இந்தக் காரணத்தினால் இறந்தார் என்று விரிவான தகவல்கள் இடம்பெறுகின்றன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, இறந்தவர்கள் விவரம் எதுவும் வெளியிடப்படுவதில்லை.

தனியார் பள்ளிகளுக்காகவே, 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்த முற்பட்டு நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியது தமிழ்நாடு அரசு என்றொரு கருத்து பரவலாக இருக்கிறது. அதேநிலை தனியார் மருத்துவமனைகள் விஷயத்திலும் நேர்ந்துவிடக் கூடாது என்பதை அரசு உணர வேண்டிய காலமிது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x