Published : 10 Jun 2020 09:51 AM
Last Updated : 10 Jun 2020 09:51 AM

ஜெ.அன்பழகன் மறைவு: உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர்; ஸ்டாலின் இரங்கல்

உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் ஜெ.அன்பழகன் என, அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

"இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியாக காலை நேரத்தில் வர வேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கருணாநிதியின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் திமுக செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது.

கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

திமுக ரத்தம் பாய்ந்த உடல், கருணாநிதி ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில், அன்பழகன் அவர்தம் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திமுக உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்?

ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு, கட்சிப்பணி, தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை. திமுகவின் தீரமிக்க உடன்பிறப்பு, மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுகவின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. திமுகக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், திமுகவின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகனின் தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது அந்தத் திருமுகத்தை!"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x