Published : 10 Jun 2020 09:34 AM
Last Updated : 10 Jun 2020 09:34 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை, ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானது. 80% ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் செலுத்தப்படுவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த 2 தினங்களில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, இரு தினங்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் ஜெ.அன்பழகனின் சிறுநீரகம், இதயம் ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த 6-ம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 10) காலை உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த ஜெ.அன்பழகன் திமுக சார்பில் 3 முறை போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வென்றவர். 2001-ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011, 2016 ஆகிய தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x