அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசல்: கேள்விக்குறியாகும் சமூக இடைவெளி- கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் அபாயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பயணிகள் கூட்ட நெரிசல் காணப்படுவதால் கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இம்மாதம் 1-ம் தேதி முதல் 50 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பேருந்துகளில் 65 சதவீதம் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகளில் இந்த நடைமுறைகள் ஏதுவும் கடைபிடிக்கப்படவில்லை. பல பேருந்துகளில் வாசலில் தொங்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக திருநெல்வேலி- தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகளில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது. அதுபோல ஓட்டப்பிடாரம், வேம்பார், கீழவைப்பார் போன்ற கிராமப்பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகளில் சிலர் முகக்கவசம் அணியாமலே பயணிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கரோனா தொற்று மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பேருந்துகளில் அரசு அறிவித்த நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
