

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தாமிரபரணி ஆற்றை அழகுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த தடையின்மை சான்று வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகரில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
திருநெல்வேலி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு 59 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 7 பணிகள் முடிவு பெற்றுள்ளது. தற்போது 20 பணிகள் நடைபெற்று வருகிறது. 19 பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதர 13 பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 25.3.2020 முதல் 30.6.2020 வரை ஊரடங்கு காரணமாக பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் நடைபெறுகின்றன.
தாமிரபரணி நதியை அழகுபடுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் 2 பணிகளுக்கான தடையின்மை சான்றினை வழங்க சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை விரைவாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வணிக வளாகம், புதிய பேருந்து நிலையத்தில் பலஅடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியின்போது பெறப்படும் மண்ணை அப்புறப்படுத்த ஏதுவாக கனிம வளத்துறை உடனடியாக தடையின்மைச் சான்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன், ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயல் அலுவலர் வி. நாராயணன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.