சின்னாளபட்டியில் வறுமையில் வாடும் நெசவாளர்களை காக்க கஞ்சித்தொட்டி திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஜெ.புதுக்கோட்டையில் கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஜெ.புதுக்கோட்டையில் கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்.
Updated on
1 min read

சின்னாளபட்டி அருகே வறுமையில் வாடும் நெசவாளர்களை காக்க கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டு நெசவாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 8 கைத்தறிநெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள 4 ஆயிரம் நெசவாளர்களில் 1500 பேர் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 2500 நெசவாளர்கள் தனியாரிடம் நூல் வாங்கி நெசவு செய்து வருவாய் ஈட்டிவந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் இறுதிவாரம் முதல்

75 நாட்களுக்கு மேலாக வேலையின்றி உள்ளதால் முற்றிலும் வருவாய் இழந்து தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சின்னாளபட்டி அருகே ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் வசிக்கும் 400 க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பத்தினர் அங்குள்ள வலம்புரிவிநாயகர் கோயில் முன்பு கஞ்சி தொட்டி வைத்து கஞ்சி காய்ச்சி வருவாய் இழந்துதவிக்கும் நெசவாளர்கள் அனைவருக்கும் வழங்கிவருகின்றனர்.

இதுகுறித்து நெசவாளர் காலனியை சேர்ந்த நாகராஜன் கூறுகையில், கடந்த 75 நாட்களாக வேலையின்றி அனைவரும் தவித்துவருகின்றனர். தற்போது முறையாக நூல் மற்றும் பாவுகளை வாங்கி கூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்களுக்கு தருவதில்லை.

இதனால் நெசவாளர்கள் தனியார் உற்பத்தியாளர்களிடம் குறைந்த தொகைக்கு வேலைசெய்யவேண்டிய நிலை உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் நெய்த சேலைகளுக்கு முறையாக கூலி வழங்காததாலும் நெசவாளர்கள் வறுமையில் வாடிவருகின்றனர்.

இதனால் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு நெசவாளர்கள் பிரச்சனையை கவனத்தில்கொண்டு முறையாக நூல், பாவுகள் மற்றும் நியாயமான கூலிகளை வழங்கி நெசவாளர்களின் வறுமையை போக்கவேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in