Last Updated : 09 Jun, 2020 07:27 PM

 

Published : 09 Jun 2020 07:27 PM
Last Updated : 09 Jun 2020 07:27 PM

வெட்டுக்கிளிகளை வேட்டையாடும் பறவைகள்!

ரோஸி ஸ்டார்லிங்

நாம் கண்டும் காணாத பூச்சிகளை, பறவைகள் மட்டும் கட்டுப்படுத்தாவிட்டால் அவை பல்கிப் பெருகியிருக்கும். ஆனால், இயற்கையில் அமைந்திருக்கும் உணவுச் சங்கிலி அதைத் தடை செய்கிறது.

2018 ஜூனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, ஆண்டுக்கு 400 முதல் 500 மில்லியின் டன் பூச்சிகளை பறவைகள் உட்கொள்கின்றன. இதில், வெட்டுக்கிளிகளும் அடங்கும்.

ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்யும் பாலைவன வெட்டுக்கிளிகள், ஏமன், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன. சாதாரணமாகத் தம் வலசையை ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு அவை முடித்துவிடுவது வழக்கம். ஆனால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவை பஞ்சாப், குஜராத், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் வரை பரவியுள்ளன.

கூட்டம் கூட்டமாக வரும் இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளைப் பற்றி பலரும் கவலை கொள்ளும் நேரத்தில், வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பறவைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ரோஸி ஸ்டார்லிங் (சூறைக்குருவி அல்லது சோளக்குருவி)

வெட்டுக்கிளிகளைப் பிரதானமாக உட்கொள்ளும் பறவைகளில் குறிப்பிடத்தக்கது 'ரோஸி ஸ்டார்லிங்'. இந்தப் பறவை 'வெட்டுக்கிளி பறவை' (Locust bird) என்றே பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைனா வகையைச் சேர்ந்த இந்தப் பறவைகள், குளிர்காலம் தொடங்கும்போது, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து புறப்பட்டு இங்கு உணவுக்காக வலசை வருகின்றன. பெருந்திரளாக வரும் இந்தப் பறவைகள் வெட்டுக்கிளிகளைத் தேடிப்பிடித்து உண்கின்றன. மேலும், இனப்பெருக்கும் செய்யும்போது தனது குஞ்சுகளுக்கு வெட்டுக்கிளிகளையே அவை முக்கிய உணவாக அளிக்கின்றன.

மைனா வகைகளைச் சேர்ந்த மலை மைனா, கருந்தலை மைனா, காட்டு மைனா ஆகியவற்றுக்கும் வெட்டுக்கிளிகளே பிரதான உணவு.. தரையில் இரைதேடும் பறவைகள், புல்வெளிகளில் வாழும் பறவைகளில் பெரும்பாலானவை வெட்டுக்கிளிகளை உட்கொள்கின்றன. ஒரு நாளைக்கு அவை 2 முதல் 84 வெட்டுக்கிளிகள் வரை உட்கொள்கின்றன.

இரைகொல்லிப் பறவைகள்

சீனா, மங்கோலியா, ரஷ்யாவில் இருந்து வலசை வரும் 'Amur falcon' எனும் வல்லூறுகள், இந்தியா வழியாக ஆப்பிரிக்காவுக்கு வலசை செல்பவை. இவை, செல்லும் பாதையில் வெட்டுக்கிளிகளைப் பிடித்து உண்கின்றன.

அமூர் ஃபால்கன்

இரைகொல்லிப் பறவைகளில் 'Montagu’s Harrier' என்ற பருந்துகள் புல்வெளிகளை வாழ்விடமாகக் கொண்டவை. அவ்வாறு வலசை வரும் பருந்துகள், வெட்டுக்கிளிகள் வரும் பாதையை பின்தொடர்ந்து வந்து அவற்றை உட்கொண்டதற்கான பதிவுகள் உள்ளன.

உள்ளூர் பறவைகள்

கீச்சான்கள் (Shrikes), கரிச்சான்கள் (Drongos), சிட்டுக்குருவி வகைகள், சின்னத்தோல் குருவி (Little Pratincole), மாம்பழச் சிட்டு (Common Iora), பனங்காடை (Indian Roller), தவிட்டுக்குருவி (Yellow-billed Babbler), வாலாட்டி குருவி வகைகள் (Wagtails), கௌதாரி, செம்போத்து, தகைவிலான்கள் (Swallows), நீர் வாழ் பறவையான குளத்துக் கொக்கு (Indian pond heron), ஆள்காட்டி பறவைகள் (Lapwings), கல் குருவி (Indian Courser), தூக்கணாங்குருவி ஆகியவை வெட்டுக்கிளிகளை உட்கொள்கின்றன.

குளத்துக் கொக்கு

பஞ்சுருட்டான் வகைகளில் சிறிய பஞ்சுருட்டான் (Green bee eater), செந்தலை பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater), நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater) ஆகியவையும் வெட்டுக்கிளிகளை தேடிப்பிடித்து சாப்பிடுகின்றன.

கல் குருவி

ஆனால், பெரும்படையாக பாலைவன வெட்டுக்கிளிகள் வரும்போது அவற்றை பறவைகளால் கட்டுப்படுத்த முடியுமா என 'தி நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டி' (TNBS) ஒருங்கிணைப்பாளர் பாவேந்தனிடம் கேட்டோம்.

இயற்கையை மீறிய செயல்

"லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வரும்போது அவற்றை பறவைகளால் கட்டுப்படுத்த முடியாது.இது இயற்கை சமநிலையை மீறிய செயல். ஒரு பறவையால் எவ்வளவு வெட்டுக்கிளிகளை சாப்பிட முடியுமோ அவற்றை மட்டுமே சாப்பிட முடியும். எண்ணிக்கை அதிகரிக்கும்போது, கூடுதலாக சில வெட்டுக்கிளிகளை வேண்டுமானால் பறவைகளால் சாப்பிட முடியும். பறவைகள் குறைந்துவிட்டதால் வெட்டுக்கிளிகள் படையெடுக்கின்றன என்பது தவறான கருத்து" என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x