Last Updated : 09 Jun, 2020 06:21 PM

 

Published : 09 Jun 2020 06:21 PM
Last Updated : 09 Jun 2020 06:21 PM

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி - செங்கல்பட்டு இடையே 12-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கச் செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார். மொத்த இருக்கைகளில் 60 சதவீதப் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் ஓட்டுநர்களுக்கு தர்மராஜ் அறிவுறுத்தியுள்ளார். அரசு விதிமுறையின்படி மண்டலம் விட்டு மண்டலம் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது, என்றும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல, திருச்சி - செங்கல்பட்டு மார்க்கத்தில் ஜூன் 12-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி - செங்கல்பட்டு இடையே சூப்பர் ஃபாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அதாவது, காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தடத்தில் இயங்கும் பல்லவன் விரைவு ரயில் சிறப்பு ரயிலாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் காலை 7 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் இந்த ரயில், அங்கிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

அதேபோல திருச்சி - சென்னை எழும்பூர் விரைவு ரயிலாக இயங்கிவந்த சோழன் விரைவு ரயில், செங்கல்பட்டு - திருச்சி இன்டர்சிட்டி சிறப்பு ரயிலாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் இந்த ரயில் அங்கிருந்து மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அரக்கோணம் - கோயம்புத்தூர் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்பட்ட கோவை விரைவு ரயில், சிறப்பு ரயிலாக அரக்கோணம் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் இயங்கும். இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் காலை 7 மணிக்கு அரக்கோணத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கோவையிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் அனைத்துக்குமான முன்பதிவுகள் நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே இந்த ரயில்களில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்கள் போக்குவரத்து ஆகியவை அடுத்தடுத்து தொடங்கப்படுவதை அடுத்து தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே பொதுமுடக்கம் முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டுள்ளதாகவே கருதலாம். ஏற்கெனவே இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் மக்கள் எவ்வித கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதில்லை. இந்த நிலையில் தனியார் பேருந்துகள் கட்டண வசூலைத் தியாகம் செய்து கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x