Last Updated : 09 Jun, 2020 05:53 PM

 

Published : 09 Jun 2020 05:53 PM
Last Updated : 09 Jun 2020 05:53 PM

பேராவூரணி அருகே குளம் துார்வரும் போது 2,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு; தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறையினர் ஆய்வு

கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி.

தஞ்சாவூர்

பேராவூரணி அருகே குளம் துார்வரும் போது 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளத்தில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 8-ம் தேதி, பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை வெட்டியபோது, பழமையான கருப்பு - சிவப்பு வண்ணத்தில் பெரிய பெரிய சுடுமண் தாழிகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. பல தாழிகள் உடைந்து பாதி அளவில் காணப்பட்டன.

இதையடுத்து கிராம மக்கள், வட்டாட்சியர், தொல்லியல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். மேலும், துார்வரும் பணிகளை நிறுத்தி விட்டு, தாழிகள் காணப்பட்ட இடங்களைச் சுற்றி கயிறுகளைக் கொண்டு வேலி அமைத்துள்ளனர்.

அத்துடன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்று (ஜூன் 9), சம்பவ இடத்துக்கு வந்த தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை ஆய்வு மாணவர் கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, "இக்குளத்தில் தாழிகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது. ஆய்வு செய்த நிலையில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானதாகத் தெரியவருகிறது. அதனால் மிகத் துல்லியமாக ஆய்வு செய்தால், பல வரலாற்றை அறியலாம்.

மேலும், பானைகளில் எழுத்துகள் இருக்கிறதா என்பதைக் கவனமாக ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை உயர் அதிகாரிகளுக்கு ஆய்வு அறிக்கை அனுப்பிய பிறகு மற்ற பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, "கடந்த 1996-ம் ஆண்டு, இதே குளத்தின் அருகில், முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்போது தொல்லியல் துறையினருக்குத் தகவல் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு இடையே அம்பலத்திடல் என்னுமிடத்தில் வன்னி மரங்கள் நிறைந்த வில்லுன்னி ஆற்றங்கரையில் கருப்பு, சிவப்பு முதுமக்கள் தாழிகள், எலும்புகள், சிறிய பானைகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பரவி இருந்தது கண்டறியப்பட்டது. எங்கள் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தினால், தொன்மையான மரபுகள், வரலாறு குறித்த தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x