

கடந்த மார்ச் மாதம் முதல் இயங்காத நிலையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு முழுமையாக மின் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் மின் துறை அமைச்சர் தங்கமணியிடம் முறையிட்டனர்.
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ், ஏ.சிவசண்முககுமார், எஸ்.சுருளிவேல் மற்றும் நிர்வாகிகள், தமிழக மின் வாரியத் துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் இன்று (ஜூன் 9) அளித்த மனு விவரம்:
"கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஏற்கெனவே சர்வதேச பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் சிறு, குறு நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. தற்போதைய கரோனா பாதிப்பு தொழில் நிறுவனங்களை மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.
ஊரடங்கின்போது தொழிற்கூடங்கள் இயங்காததால், முற்றிலும் மின்சாரம் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மார்ச் முதல் ஜூன் மாதங்கள் வரையிலான 4 மாதங்களுக்கு மின் கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். 150 ஹெச்.பி. வரையிலான மின் இணைப்புகளுக்கு இனிவரும் ஓராண்டு காலத்துக்கு மின் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்க வேண்டும். வெல்டிங் மின் இணைப்புகளுக்கு, இயந்திர இணைப்புகளுக்கான மின் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்"
இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
தொழில் துறையினரின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தங்கமணி உறுதியளித்தார்.