

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாக எஸ்.ஐ. உட்பட 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே வா.பகண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் (35). லாரி ஓட்டுநரான இவர், கர்நாடக மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். செஞ்சி அருகே வளத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, முருகவேல் லாரியை நிறுத்தாமலும், வேகமாகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் லாரியை இயக்கியதாக வளத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் முருகவேல் வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அதில், வளத்தி போலீஸார் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், கொடுக்க மறுத்ததால் தன் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், போலீஸாரை விமர்சித்துள்ளார்.
இதனையடுத்து வளத்தி எஸ்.ஐ. ரவிச்சந்திரன், காவலர்கள் மோகன், ஏழுமலை ஆகியோரை இன்று (ஜூன் 9) எஸ்.பி. ஜெயக்குமார் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதற்கிடையே வா. பகண்டை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி கடைக்குச் சென்ற முருகவேல் மற்றும் ஐயப்பன் ஆகியோர் சிகரெட் கடன் கேட்டதாகவும், ராமசாமி கொடுக்க மறுத்ததால் கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை தட்டிக்கேட்ட திருநாவுக்கரசு (50) என்பவரை சோடா பாட்டிலால் தாக்கியதாகவும் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகவேல், ஐயப்பன் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைத்தனர்.