

மாலத்தீவில் இருந்து கப்பலில் தூத்துக்குடிக்கு வந்த இமாச்சலப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் 355 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் கடந்த 7-ம் தேதி தூத்துக்குடி வந்த இம்மாச்சலப்பிரதேச மாநிலம் ஜெய்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு கோரனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலத்தீவில் இருந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 114 பேர் தூத்துக்குடி தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் இமாச்சலப்பிரதேச இளைஞருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இதேபோல் மாலத்தீவில் இருந்து வந்த மேலும் 86 பேர் கோவில்பட்டி தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து நேற்று வரை 219 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.