தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்தது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என, பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கரோனா அச்சம் காரணமாக, மாணவர்களைத் தேர்வுகளுக்கு அனுப்ப பெற்றோர்களும் தயங்குவதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான வழக்கில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டது. அப்போது, வரும் மாதங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தேர்வு நடத்த இதுவே உகந்த தருணம் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி இன்று (ஜூன் 9) காணொலி மூலமாக ஊடகங்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, கரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வைத் தள்ளிவைப்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தொற்று குறைய வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேர்வு குறித்து அரசு ஆலோசித்தது. அதன்படி, பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனைக் காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் கணக்கிடப்படும்.
12-ம் வகுப்பில் ஏற்கெனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறுதேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
