

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் கடுமையான மருத்துவ நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், மருத்துவப் படிப்பு முடித்து மருத்துவராகச் செயல்படாமல் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களாகப் பணிபுரியும் மருத்துவர்களை அப்பணியிலிருந்து விடுவித்து, கரோனா தடுப்புப் பணியில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ் மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் இதுகுறித்து இன்று விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:
''உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், தமிழ்நாட்டிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு இதனை தேசியப் பேரிடராக அறிவித்துத் தகுந்த முறையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தலைமையில், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எந்தவித விடுப்பும் எடுக்காமல் மக்கள் நலனை எண்ணி உழைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மேற்கொண்டுள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக சென்னையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்றே (09.06.2020) பணியில் சேரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மருத்துவர்களும் ஈடுபட்டு வரும் நிலையில், மருத்துவர்களாக இருந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டிய, தகுதிவாய்ந்த ( மருத்துவத்தில் உயர் கல்வித் தகுதி பெற்றுள்ளவர்கள் உட்பட ) பல மருத்துவர்கள், உணவுப் பாதுகாப்புத் துறையில் மாவட்ட நியமன அலுவலர்களாக, மருத்துவத்திற்குச் சம்பந்தமில்லாத பணிகளைச் செய்து வருகின்றனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள், 2011-ம் ஆண்டில் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட்ட பொழுது தற்காலிக ஏற்பாடாக, மருத்துவர்கள் மாவட்ட நியமன அலுவலர்களாக மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டனர். மாற்றுப் பணி மட்டுமே என்பதால் அவர்களுக்கு நிகரான மருத்துவர் தகுதியுடையோர்களில் பணி மூப்பு அடிப்படையிலோ அல்லது சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளை பின்பற்றியோ நியமனம் நடைபெறவில்லை.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தற்காலிக ஏற்பாடுகளுக்கு வழங்கிய விதிவிலக்கு கடந்த 05.08.2019 உடன் நிறைவுபெற்று விட்டது . அதற்குப் பிறகு உணவு விதிகளின்படி தற்போது மாவட்ட நியமன அலுவலர்களாக உள்ள மருத்துவர்கள் மேற்கொண்டு அந்தப் பணியில் தொடர இயலாது.
ஏற்கெனவே கர்நாடக உயர் நீதிமன்றம் மருத்துவர்கள் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களாகத் தொடர்வதை அனுமதிக்க மறுத்துவிட்டது. அம்மாநில அரசு, மருத்துவர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான பணியான மருத்துவப் பணியே செய்ய ஆணையிட்டு, செயல்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகமே மருத்துவ நெருக்கடியைச் சந்தித்துவரும் இன்றைய நிலையிலாவது, மருத்துவப் படிப்பு முடித்து உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களாகப் பணியாற்றும் மருத்துவர்களை அப்பணியில் இருந்து விடுவித்து, கரோனா தடுப்புப் பணிகளில் நியமித்து மக்களுக்கு மேலும் சிறப்பாகப் பணியாற்ற உதவிட வேண்டும் என்று முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஆகியோரைக் கேட்டுக் கொள்கின்றோம்''.
இவ்வாறு அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.