Published : 09 Jun 2020 10:17 AM
Last Updated : 09 Jun 2020 10:17 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை:

"கரோனாவின் கோரப் பிடியினாலும், பொருளாதார பேரழிவினாலும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிற மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்றுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தியிருக்கிறது.

கடந்த மார்ச் 16 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. மீண்டும் மே 4 ஆம் தேதி பெட்ரோல் ரூபாய் 3.26 உயர்ந்து ரூபாய் 75.54 ஆனது. டீசல் ரூபாய் 2.51 உயர்ந்து, ரூபாய் 68.22 ஆனது. தற்போது 34 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் விலை 53 காசுகளும், டீசல் விலை 52 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை ஈவு இரக்கம் இல்லாமல் மத்திய பாஜக அரசு மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. அதேபோல, தமிழக அரசு கடந்த மே 4 ஆம் தேதி மதிப்பு கூட்டுவரியை உயர்த்தியதால் பெட்ரோல் விலை ரூ.3.26, டீசல் விலை ரூ.2.51 ஆக ஏற்கெனவே உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

பாஜக ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விலை சரிவை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் 2014 முதல் இதுவரை ரூபாய் 16 லட்சம் கோடி வரி விதித்துள்ளது. இதில் கலால் வரி மட்டும் ரூபாய் 11 லட்சம் கோடியாகும். இந்த வகையில் பாஜக அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது. இதுவரை 12 முறை கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

பாஜக ஆட்சியின் ஆறு ஆண்டுகளில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 3.56 ஆக இருந்த கலால் வரியை, ரூபாய் 31.83 ஆக உயர்த்திக் கொண்டது. இது 800 சதவீத வரி உயர்வாகும். வரலாற்றில் இல்லாத அளவுக்கு கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது ஏற்றப்பட்டிருக்கிற சுமையை கண்டு கவலைப்படாத அரசாக பாஜக அரசு விளங்கி வருகிறது.

கடந்த மே 2014 இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 106.94 டாலராக இருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.41 ஆகவும், டீசல் விலை ரூபாய் 56.71 ஆகவும் இருந்தது. ஆனால், ஏப்ரல் 2020 இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 16.38 டாலராக கடுமையாக வீழ்ச்சியடைந்தபோது பெட்ரோல் விலை ரூபாய் 69.63 ஆகவும், டீசல் விலை ரூபாய் 62.33 ஆகவும் இருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதன்மூலம் சர்வதேச சந்தையில் வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என்று குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

எனவே, கரோனா தொற்றினாலும், பொது ஊரடங்கினாலும், வேலையை இழந்து, வருவாய் துறந்து, வாழ்வாதாரத்தை பறிகொடுத்து, அச்சம், பீதியோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x