

கரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம், மரணம், மருத்துவச் சிகிச்சை தொடர்பாக செல்வோருக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்குச் சொத்துப் பத்திரப்பதிவு செய்வதற்காக செல்வோர் இ-பாஸ் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இதை அரசின் கவனத்துக்கு பதிவுத்துறை தலைவர் கொண்டு சென்றார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா எழுதியுள்ள கடிதத்தில், ஒரு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டத்துக்குப் பத்திரப்பதிவுக்காகச் செல்வோர், பதிவுத்துறை அளித்துள்ள டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்தி பயணம் செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். அதோடு, பதிவு செய்வதற்கான ஆவணத்தைச் சோதனை செய்யும் அதிகாரியிடம் காட்டினால் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.