Published : 09 Jun 2020 06:48 AM
Last Updated : 09 Jun 2020 06:48 AM

தஞ்சை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்- இயக்கம் செய்யப்படாததால் எடையிழப்பு ஏற்படவும் வாய்ப்பு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பற்ற ஷெட்களில் அடுக்கி வைக்கப் பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை பருவத்தில் பம்புசெட் மூலம் 30 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

இதற்காக மாவட்டத்தில் தமிழக அரசின் 149 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, ஜூன் 7-ம் தேதி வரை 33 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இங்கு கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகள் 2 நாட்களுக்கு ஒருமுறை லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு குடோன்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது இயக்கம் செய்யப்படாமல், திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலைய பணியாளர் கள் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு பகுதி கொள்முதல் பணியாளர் ஒருவர் கூறியது:

தற்போது மழை பெய்துவரும் நிலையில், கொள்முதல் நிலையங் களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின்றன. பக்க வாட்டுச் சுவர் ஏதுமில்லாத ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டில் வெகு நாட்களாக அடுக்கி வைக்கப் பட்டுள்ள நெல் மூட்டைகள் மழை பெய்யும்போது சாரல் அடித்து வீணாகிவருகின்றன. வெகுநாட்களாக அடுக்கி வைத்துள்ளதால் எடையிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதற்கான அபராதத் தொகையை பணியாளர்களே அரசுக்கு செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். மேலும், புதிதாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய முடியாத தால், அவர்களுடன் தகராறு ஏற்படுகிறது என்றார்.

இதுகுறித்து கொல்லாங்கரை விவசாயி சிவா கூறியபோது, “இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குவதால், விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கதிரேசன் கூறியது:

தற்போது நாளொன்றுக்கு 2,500 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அவற்றை கொள்முதல் நிலையத்திலேயே இருப்பு வைக்க முடியவில்லை. மழையால் பணியாளர்கள் அவ திக்குள்ளாவது உண்மைதான். இதனால், முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறோம்.

விரைவில், அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x