

ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசுவிமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இங்குள்ள விமான தளத்தில் தினமும் பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம். நேற்றும் சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா(20) என்பதும், இவர் சென்னை அருகே உள்ள பொழிச்சலூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரது குடும்பத்தினர் ஒடிசா விரைந்துள்ளனர்.
உயிரிழந்த அனீஸ் பாத்திமாவின் தந்தை மறைந்த முகமது கோரி வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி மையத்தில் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனீஸ் பாத்திமாவின் மரணம் பொழிச்சலூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.