

தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ்ப் பணியை பெருமைப் படுத்தும் வகையில் அவரது இரு நூற்றாண்டு நிறைவு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழறிஞர் கால்டுவெல்லின் இருநூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் தென்னிந்திய திருச்சபை நெல்லை மண்டலப் பேராயர் ஜே.ஜே. கிருஸ்துதாஸ் கோரிக்கை விடுத்தார்.
தமிழறிஞர் கால்டுவெல், 7.5.1814-ல் அயர்லாந்தில் பிறந்தவர். 1891-ல் தமது 77-வது வயதில் தமிழகத்தின கொடைக்கானல் மலையில் உயிர் துறந்தார். அவரது உடல் நெல்லை மாவட்டம் இடையன்குடியில் அவர் எழுப்பிய திருச்சபை ஆலயத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று, தமது 23-வது வயதில் சமயப் பணிக்காக தமிழகம் வந்த கால்டுவெல், இடையன்குடியை இருப்பிடமாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார். இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலைநாட்டு மொழிகளிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் போற்றத்தக்கப் புலமை பெற்றிருந்தார்.
அதன் பயனாக ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் ஒப்பிலா உயர் தமிழ் மொழியியல் ஆய்வு நூல் ஒன்றை எழுதினார். ‘திராவிட மொழிகள் ஒரு தனியினம், அவற்றுக்கு தாய் தமிழே’ என விளக்கியவர். தமிழறிஞர் கால்டுவெல்லை பெருமைப்படுத்தும் வகையிலும் அவரது இருநூற்றாண்டை சிறப்பிக்கும் வகையிலும் 7-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு இடையன்குடியில் உள்ள நினைவில்லத்திலும் சென்னை மெரினா கடற்கரை சாலையிலும் உள்ள அவரது சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலையணிவித்து பெருமைப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்ச்சி யில் அமைச்சர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வர்.