

பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்ய நேர்ந்தவர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது உடல் எடை அதிகரிப்பு. வெளியே செல்வது, நடப்பது போன்றவை குறைந்ததாலும், எதையாவது கொறித்துக்கொண்டே வேலை பார்ப்பதாலும் ஏற்பட்ட விளைவு இது.
முதல் இரு மாதங்கள் உட்கார்ந்தே சாதித்தவர்கள், இப்போது தொந்தியின் அதீத வளர்ச்சியைப் பார்த்துப் பயந்து நடைப்பயிற்சி, மெல்லோட்டம், தொலைதூர ஓட்டம் என்று இறங்கிவிட்டார்கள். உடற்பயிற்சிக் கூடங்களும், விளையாட்டு மைதானங்களும் மூடப்பட்டிருந்தாலும், சிறுநகரங்களில் சாலையில் அதிகம் பேர் ஓடுவதையும், மதுரையில் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி நடைசெல்வோரையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அதேபோல கடற்கரையோரம் வசிப்போர் உள்ளூர் கடற்கரையில் ஓடுகிறார்கள். இது அவர்களுக்கு ஆசுவாசத்தையும், உற்சாகத்தையும் தருகிறது.
ஆனால், "இந்த நேரத்தில் இது அவ்வளவு பாதுகாப்பான விஷயமல்ல" என்று எச்சரிக்கிறார் சிவகங்கை அரசு பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. இதுபற்றி அவர் கூறுகையில், "கரோனா பாதித்திருக்கும் மக்களில் சிலருக்கு 'ஹேப்பி ஹைப்பாக்சியா' (Happy Hypoxia) எனும் நிலை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வெளியே எந்த அறிகுறிகளும் இன்றி நுரையீரலை வைரஸ் தாக்கி அதன் செயல்பாட்டைக் குறைத்து, நுரையீரலின் முக்கிய வேலையான ஆக்சிஜனைப் பெற்று ரத்தத்தைச் சுத்தம் செய்யும் வேலையில் தொய்வு ஏற்படுகிறது.
இது அபாய கட்டத்தைத் தாண்டும் வரைகூட பலருக்கும் வெளியே தெரிவதில்லை. அபாய அளவில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும் நிலையில்கூட சாதாரணமாக மருத்துவமனைகளுக்கு நடந்து வருவதைக் காணமுடிவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தயவுகூர்ந்து புகைபிடிப்பதை நிறுத்துங்கள். ஆக்சிஜன் தேவையை அதிகமாக்கும் உடற்பயிற்சிகளை சில நாட்களுக்குத் தவிர்த்து வாருங்கள். தயவுசெய்து கரோனா நிலைமை சீராகும் வரை இதயத்துடிப்பை அதிகரிக்கும் அதிக ஆக்சிஜனைக் கோரும் உடற்பயிற்சிகளான தொலை தூர ஓட்டம், மெது ஓட்டம், வேகமான நடை, ஏரோஃபிக்ஸ், ஷட்டில் பேட்மிண்டன் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
'ஹேப்பி ஹைபாக்சியா' ஏற்படுவதற்கு முன்பு சில நாட்களுக்கு அதீத உடல் சோர்வு, உடல் வலி, மூச்சு விடுவதில் லேசான சிரமம், மூச்சு ஏங்கி ஏங்கி விடுவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் உங்களின் மருத்துவரைச் சந்தித்து இந்த அறிகுறிகளைக் கூறுங்கள்.
திடீரென்று நெஞ்சில் இறுக்கம், மூச்சு விடுவதில் கடும் சிரமம் தோன்றுமாயின் உடனே மருத்துவமனையை நாட வேண்டும். ஹேப்பி ஹைப்பாக்சியாவுக்கு சிகிச்சை உண்டு. ஆக்சிஜன் அல்லது வென்டிலேட்டர் உதவியுடன் சிறந்த முன்னேற்றம் அடைய முடியும். ஆனால், இதை உதாசீனப்படுத்திக் காலம் தாழ்த்தினால் நமது முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், இதயம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு உண்டு" என்று அரசு பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.