ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை, ஆட்சியரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் கடன் நிறுவனங்கள்; மகளிர் சுய உதவிக் குழுவினர் கதறல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மகளிர் சுய உதவிக் குழுவினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மகளிர் சுய உதவிக் குழுவினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
Updated on
1 min read

ஊரடங்கால் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையிலும், கடன் தவணையையும், வட்டியையும் மற்றும் தவணை நிலுவைத் தொகைக்காக கூடுதல் வட்டியும் கேட்டு கடன் வழங்கிய நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் புகார் தெரிவித்தன.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக இன்று (ஜூன் 8) ஸ்ரீரங்கம் வட்டம் வியாழன்மேடு மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட கிராப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "சிறு கடன் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் ஆகியற்றில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் பெற்று, முறையாக தவணை செலுத்தி வந்தோம். இதனிடையே, ஊரடங்கால் வேலையின்றி வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

தற்போது கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தவணைத் தொகை, வட்டி மற்றும் தவணை நிலுவைக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டும் என்று கடன் வழங்கிய நிறுவனங்கள் நிர்பந்தம் செய்கின்றன. தவணைத் தொகையைச் செலுத்த நாங்கள் தயாராக உள்ள நிலையில், தவணை நிலுவைக்காக கூடுதல் வட்டி வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்.

மேலும், அரசு அறிவுறுத்தலின்படி ஆக.31 ஆம் தேதி வரை தவணை, வட்டி வசூலிக்கத் தடை விதிப்பதுடன், மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, "கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் உள்ளுர் பகுதி வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள், நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் உட்பட), (கடன் வழங்கும் நிறுவனங்கள்) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வேளாண் கடன், சில்லறைக் கடன் மற்றும் பயிர்க் கடன் உட்பட அனைத்துவிதக் கடன்களுக்குமான மீள் செலுத்தும் தவணை தள்ளிவைப்புக் காலம் ஆக.31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in