

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தில் முதல்வர் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், தற்போது மத்திய அரசைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறாரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள் கருப்பணன், கடம்பூர் ராஜூ போன்றவர்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசுகிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, முதல்வர் போராடும் மக்களை ஏமாற்றுவதைக் கைவிட்டு 8 வழிச் சாலை குறித்துத் தனது நிலையைத் தெளிவுபடுத்துவதோடு, கரோனா பாதிப்பு காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் மக்களுக்கு மதிப்பளித்து அத்திட்டத்தைக் கைவிட வேண்டுகிறேன்.
தஞ்சை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை 2019-20 ஆம் ஆண்டு சாகுபடி செய்த கரும்பைப் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையில் விவசாயிகளுக்கு இதுநாள் வரை 1 ரூபாய்கூட வழங்கவில்லை.
இதனால், சென்ற ஆண்டு சாகுபடிக்குப் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் புதிய கடனும் பெற முடியவில்லை. இதனால் மறு உற்பத்தி செய்வதற்கு வழியின்றி விவசாயிகள் பரிதவிக்கின்றனர். அவர்களின் நிலையை உணர்ந்து உடனடியாக அவர்களுக்கான முழுத் தொகையையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.