

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கியுள்ளது. அந்த நோயாளிகள் உடல்நிலை நல்ல நிலையில் முன்னேற்றம் அடைவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் மூலம் பெறப்பட்ட பிளாஸ்மா மூலம் மற்ற கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா சிகிச்சை முறை கேரளாவில் பின்பற்றப்பட்டது.
இந்த முறையில் ஏராளமான நோயாளிகள் குணமடைந்தனர். தற்போது இந்த சிகிச்சை தமிழகத்திலும் கடைபிடிக்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 நோயாளிகளுக்கு இந்த பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. அந்த நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘டீன்’ சங்குமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், "கரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும்.
இந்த அடிப்படையில் கரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கரோனா வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும். அந்த அடிப்படையில் தற்போது பரிசோதனை முறையில் முதலில் 54 வயது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை வழங்கினோம்.
இவர் பைபாஸ் சர்ஜரி செய்து கரோனா நோய் தோற்றால் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.
இவரை 30 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து 21 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் செலுத்தி உள்ளோம். இவரது உடல்நிலை நல்லநிலையில் உள்ளது. இதையடுத்து மற்றொருவருக்கும் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கி உள்ளோம்" என்றார்.