கரோனா சர்ச்சை; புது காணொலி வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த வரதராஜன்
செய்தி வாசிப்பாளரும், நாடக நடிகருமான வரதராஜன், “சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் அவதிப்பட்ட எனது உறவினருக்கு எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டோம். சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதி இல்லை. தயவுசெய்து மக்கள் வீட்டிலேயே இருங்கள்” என ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.
சென்னையில் இன்று காலை நடந்த கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “சுகாதாரத்துறையின் செயல்பாட்டைக் குற்றம் சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோஷம்? எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன என அவர் தெளிவுபடுத்தவேண்டும். செய்தி வாசிப்பாளர் வரதராஜனை நேரடியாக என்னுடன் வரச்சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன். தவறான தகவல்களைப் பரப்பும் வரதராஜன் மீது பெருந்தொற்று நோய்ச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என கடுமையாகச் சாடினார்.
இந்நிலையில் நேற்றைய காணொலி தொடர்பாக விளக்கம் சொல்லி புதிய காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் வரதராஜன். அதில் அவர், “நேற்று சிகிச்சையில் சேர்த்த நண்பரின் உடல்நலம் இப்போது நன்றாக முன்னேறியிருக்கிறது. நான் பேசிய அந்தக் காணொலியை எனது நாடகக் குழுவின் சக நண்பர்கள் 25 பேருக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் அனுப்பினேன். அவர்களில் யாரோ ஒருவர் அதை ஃபார்வர்ட் செய்து அது உலகம் முழுவதும் போய்விட்டது. அவசியத் தேவை தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியில் போகாதீர்கள்.
கரோனா ஒழிப்பில் மத்திய - மாநில அரசுகள் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளும், அமைச்சர்களும் தினமும் சந்தித்து எவ்வளவு கூட்டங்கள் நடத்துகிறார்கள்? மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் அனைவரும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முழுவீச்சில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நம் கடமையல்லவா?” என வரதராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்று வரதராஜன் பேசியதும், அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வீடியோவில் மத்திய - மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுவதாக வரதராஜன் கூறி இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
