

நிலைமை சீரடையும் வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கை:
"ஜூன் 1-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பெற்றோர்களும் ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக்கூடாது, ஒத்தி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் ஜூன் 15-ம் தேதிக்குப் பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால், கரேனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் கூடுதலாகி வருகின்றன. மாணவர்களும் இயல்பான மனநிலையில் இல்லை. இந்த மோசமான சூழ்நிலையில், ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பொருத்தமாக இருக்காது. நோய்ப் பரவல் அதிகரிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளது.
தனிமனித இடைவெளியுடன் தேர்வை நடத்த உள்ளோம் என்று அரசு கூறினாலும் கூட, தேர்வை நடத்துவதன் மூலம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வை நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு நோய் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாமல், தினசரி நோய்ப் பரவல் அதிகரித்து வருகிற காரணத்தால், மாணவர்களுக்கு இயல்பான தேர்வு எழுதும் மனநிலை இருக்காது. பெற்றோர்களும் அச்சத்துடன்தான் அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டியிருக்கும்.
எனவே, ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை தற்போது ஒத்திவைக்க வேண்டுமெனவும், நிலைமை சீரடைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்தலாம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.