

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, குடிமக்களிடம் நடத்தும் வழிப்பறிக் கொள்ளை என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கை:
"இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு எரிபொருள் உபயோகிப்பாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக வேலை மற்றும் வருமான இழப்பைச் சந்தித்ததுடன், கூடுதலான குடும்பச் செலவுச் சுமைகளைத் தாங்கி வந்தவர்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல் வேதனை அளிப்பதாகும் .
இந்த இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு கலால் வரியினையும், மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியினையும் உயர்த்தியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து வரும் சூழலில், அதன் பலனை எரிபொருள் நுகர்வோருக்குத் தராமல் தடுத்து, மத்திய, மாநில அரசுகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளையும் வரிகளையும் உயர்த்தி வருவது குடிமக்களிடம் அரசே நடத்தும் சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளையாகும்.
பெட்ரோல், டீசல் விலைகளின் உயர்வால் ஏற்படும் தொடர் விளைவுகளால் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து செல்லும். மக்கள் தலையில் செலவுச் சுமை கூடுவது குறித்து சிந்திக்காமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகளை ரத்து செய்து, கலால் மற்றும் மதிப்புக் கூட்டு வரிகளை குறைத்து, சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியின் பலனை எரிபொருள் நுகர்வோருக்கு வழங்கும் முறையில் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.