4 மாதங்களுக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும்; நாட்டுப்புறக் கலைஞர்கள் இசை இசைத்து வலியுறுத்தல்
4 மாத காலங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிய நாட்டுப்புறக் கலைஞர்கள், இசை இசைத்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வலியுறுத்தினர்.
திருப்பூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் இன்று (ஜூன் 8) அளித்த மனு:
"திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள், பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடாமல் உயிர்ப்புடனும் மக்களை மகிழ்விக்கவும், கலைகளைப் பரவலாக்கும் வகையில் பயிற்றுவித்து வருகின்றனர். எங்களது வருவாய் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் சடங்குகளைச் சார்ந்தே உள்ளது. கரோனா ஊரடங்கால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு மக்கள் கூடும் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறக்கூடாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் ரூ.2,000 வழங்கியதைப் போல், எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த நான்கு மாத காலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் நான்கு மாதங்களுக்கு ரூ.40 ஆயிரம் பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
அரசின் திட்டங்களைப் பிரச்சாரம் செய்து, விழிப்புணர்வு செய்யும் பணியினை அந்தந்த ஒன்றியம் மற்றும் வட்டாரப் பகுதி கலைஞர்களைக் கொண்டு, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் இடங்களில் மற்றும் மக்கள் வசிப்பிடங்களில் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி நடத்தி, அதன் வாயிலாக கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
நாட்டுப்புறக் கலைகளைப் பரவலாக்கும் வகையில், மக்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் நாட்டுப்புற பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். சடங்கு நிகழ்வுகளில் கலைஞர்களை தனிமனித இடைவெளியுடன் கலை நிகழ்வு நடத்திட அனுமதி வழங்க வேண்டும்.
நல வாரியத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் இது தொடர்பாக இசைக்கருவிகளை இசைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
