

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி நிலவரப்படி, 31 ஆயிரத்து 667 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒருவார காலமாக தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடக்கிறது. தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது.
கரோனா தொற்றின் தாக்கம் வீரியமடைந்து வரும் நிலையில், தமிழக அரசின் சார்பாக, சென்னையில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கென அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மையத்தில், சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் ஒருவார காலத்தில் குணமடைவதாகக் கூறுகிறார் சித்த மருத்துவரும், கரோனா சிகிச்சைக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவருமான வீரபாபு.
தற்போது வரை இங்கு 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 வயது முதல் 70 வயது வரையிலான கரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3-ம் தேதிதான் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. வரும் 10-ம் தேதி, அதாவது ஒருவார காலத்தில் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து கிட்டத்தட்ட 25 பேர் வீடு திரும்ப உள்ளனர்.
சித்த மருத்துவம் மூலம் நோயாளிகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.
கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவமனை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை ஆகியவை இணைந்து உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படியே நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. கபசுரக் குடிநீர் தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருவேளை வழங்கப்படும். பின்னர் வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என அளவு குறைக்கப்படும்.
கபசுரக் குடிநீர் தவிர, நாங்கள் தயாரிக்கும் சிறப்பு மூலிகைத் தேநீரும் வழங்கப்படுகிறது. தேநீரில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரட்டை, அதிமதுரம், மஞ்சள், ஓமம், கிராம்பு, கடுக்காய் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து பொடியாக்கி, 400 மி.லி. தண்ணீரில் 10 கி. இந்தப் பொடியை கலந்து அந்த தண்ணீரை 100 மி.லி. அளவாக வற்றி இந்த சிறப்பு மூலிகைத் தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கு தினந்தோறும் இருமுறை வழங்கப்படுகிறது.
இதுதவிர, தாளிசாதி மாத்திரை காலை, இரவு என இருவேளைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சித்த மருத்துவ முறையால் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் தெரிகின்றன?
இந்த மருத்துவ முறை கரோனா தொற்றைத் தடுப்பதற்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது. சிகிச்சை முறையாக இதனைப் பயன்படுத்தும்போது நோயாளிகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்தவர்கள் இப்போது காய்ச்சல் இல்லாமல் இருக்கின்றனர். கல்லீரலில் ஏற்கெனவே பிரச்சினை இருப்பவர்கள் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
இங்குள்ள கரோனா நோயாளிகளில் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இருக்கிறார்கள். நீரிழிவு உள்ளிட்ட மற்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அதன் தன்மைக்கேற்ப கொடுக்கப்படும் மருந்துகளின் அளவு மாறுபடும். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 55 வயதுள்ள நோயாளி ஒருவருக்கு 'ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டீஸ்' இருக்கிறது. இங்கு அவருக்கு அளித்த சிகிச்சையின் மூலம் கரோனா மட்டுமல்லாமல் 'ஆர்த்ரிட்டீஸ்' பிரச்சினையிலிருந்தும் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறார்.
நீரிழிவு நோயாளிகள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் என ஏற்கெனவே நாள்பட்ட நோயுள்ளவர்கள், முதியவர்கள் ஆகிய அதிக பாதிப்புள்ளவர்களை ஒரு வாரத்திலேயே குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப இருக்கிறோம்.
ஏற்கெனவே வேறுவித நோய்கள் இருப்பவர்களுக்கு கரோனா ஏற்படும்போது அவர்கள் உயிரிழப்பதற்கான சதவீதம் அதிகமாக இருக்கிறது என்பதையே புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. இந்த சமயத்தில் திடீரென கரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படின் இங்கு அதற்கான வசதிகள் உண்டா? அவசர சமயத்தில் எப்படி சமாளிக்கிறீர்கள்?
இங்கு அனைத்து வித வசதிகளும் இருக்கின்றன. சித்த மருத்துவத்திற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டு இருக்கின்றன. அவசரத் தேவை ஏற்படும்போது கவனித்துக்கொள்வதற்கான அனைத்து மருத்துவத் தேவைகளும் நம்மிடம் கைவசம் இருக்கிறது. இந்த சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து யாரும் தீவிர நிலைமைக்குச் செல்லவில்லை. அவசர சிகிச்சைகளும் தேவைப்படவில்லை. நன்றாகவே குணமடைந்து வருகின்றனர்.
மற்ற மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கும் சித்த மருத்துவ முறைக்கும் இடையிலான வித்தியாசங்கள் என்ன?
மற்ற மருத்துவமனைகளில் "நாம் மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். நமக்கு நோய் இருக்கிறது" என்றுதான் நோயாளிகள் உணர்வார்கள். ஆனால், இங்கு ஆரோக்கியத்தைப் பெருக்கிக்கொள்ள வருவதுபோன்று மனதளவில் உணருகின்றனர். அப்படியான சூழ்நிலை இங்கு இருக்கிறது.
அவர்களுக்குள் பயம், பதற்றம், இறுக்கம் என எதுவும் இருக்காது. இவை மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகளிடையே இருக்கும். இங்கு காலையில் நடைப்பயிற்சி செய்யலாம். அரச மரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கலாம். சூரிய ஒளி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். பதற்றம் இல்லாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் அதிகரிக்கும். மூலிகை ஆவி பிடிக்கலாம்.
மூலிகை சார்ந்த நல்ல உணவுகள் இங்கு வழங்கப்படுகின்றன. சத்தான உனவுகளுடன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மூலிகை சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, தூதுவளை தோசை, கறிவேப்பிலை இட்லி, வேப்பம்பூ ரசம், கற்பூரவல்லி ரசம், தூதுவளை சூப், நவதானிய சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
பெரும்பாலான மக்கள் அலோபதி மருத்துவத்தையே நம்புகின்றனர். சித்த மருத்துவம் குறித்து பல சமயங்களில் விமர்சனங்கள் எழுந்ததுண்டு. அப்படியிருக்கையை கரோனா போன்ற பெருந்தொற்றை இந்த சிகிச்சை முறையால் வெல்ல முடியும் என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக, மக்கள் இதனை நம்ப ஆரம்பித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் 5 நோயாளிகள் மட்டும்தான் அரசின் மூலமாக இந்த மையத்திற்கு வந்தனர். இப்போது 60 நோயாளிகள் உள்ளனர். கரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழுடன் வந்தால் அவர்களை இங்கு அனுமதித்துக்கொள்கிறோம். அவர்கள் குறித்த தகவல்களை தினந்தோறும் மாநகராட்சிக்குத் தெரியப்படுத்துகிறோம்.
வரும் 10-ம் தேதி, 70 வயதுள்ளவர்கள் வரை குணமடைந்து வீடு திரும்பும்போது மக்களுக்கு சித்த மருத்துவம் மீதிருந்த தவறான எண்ணங்கள் படிப்படியாக மாறும். சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள் ஒருவாரத்தில் குணமடைந்து செல்லவிருக்கின்றனர். அவர்கள் குணமடைந்து வீடு திரும்புவதைப் பார்க்கும்போது அரசின் கவனம் எங்கள் பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுவரை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சித்த மருத்துவத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இப்போதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பல பிரச்சினைகளுடன் வந்தவர்கள் குணமாகிச் செல்லும்போது இதனைப் பின்பற்றுவதில் தவறில்லையே.
ஏற்கெனவே புழல் சிறையில் 25 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவருக்கும் நேரடியாக சென்று சித்த மருத்துவத்தைத்தான் வழங்கினோம். அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர். நன்றாக குணமடைந்து வருகின்றனர். சித்த மருத்துவத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சென்னையில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறீர்களா?
மார்ச் மாதம் முதல் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலானபோதே சித்த மருத்துவர்களைக் களத்தில் இறக்கியிருந்தால் இந்த அளவுக்கு அதிகமாகியிருக்காது. அரசு அதனைச் செய்திருக்க வேண்டும். சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட பின்புதான் சித்த மருத்துவத்திற்கு இந்த முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. அதுவரை அரசு, சித்த மருத்துவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
கோயம்பேடு 127-வது வார்டில் சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனுமதி வழங்கியது. அப்பகுதியை ஒரு வாரம் கவனித்துக்கொண்டதற்கு பின்னர் கடந்த 15 நாட்களாக புதிய தொற்றுகள் இல்லை. ஏதாவது வெளியில் இருந்து 1-2 புதிய தொற்றாளர்கள்தான் உள்ளனர். அங்கு கபசுரக் குடிநீர், சிறப்பு மூலிகைத் தேநீரை மக்களுக்கு அதிகப்படியாக வழங்கினோம்.
சித்த மருத்துவம் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என இப்படி படிப்படியாக நிரூபிக்கும்போது அரசு எங்களை நம்பும்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் முதன்மையாக என்னென்ன கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
கரோனா அல்லாதவர்களும் வீடுகளிலேயே 5 கிராம் கபசுரப் பொடியை 250 மி.லி. கலந்து அதனை 50-60 மி.லி.யாக வற்றியவுடன் வடிகட்டிக் குடிக்கலாம். முதல் வாரம் தினந்தோறும் ஒரு வேளை அருந்தலாம். அதன்பின்னர் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை என அருந்தலாம். 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே வழங்க வேண்டும்.
ஓரளவு கல்வியறிவு உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு சென்று சேர்ந்திருக்கிறது. குடிசைப் பகுதிகளில் மக்களுக்கு அரசு இன்னும் விளக்கி சொல்ல வேண்டும். கரோனா நோயாளி உள்ளவர்களின் வீடுகளில் இருப்பவர்கள் ஏற்கெனவே கைகளை அடிக்கடி கழுவுதல், இருவேளை குளித்தல் உள்ளிட்ட சுய சுத்தத்தைக் கடைப்பிடித்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு கரோனா பரவாது. அதற்கான உதாரணங்களும் உள்ளன. குடிசைப் பகுதிகளில் இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தண்ணீர் பிரச்சினை இருக்கும், அவர்களின் சுற்றுப்புறங்களும் தூய்மையாக இருப்பதில்லை. எனவே இந்தப் பகுதிகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in