ஊராட்சி அலுவலகத்தில் இரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டாடிய துணைத் தலைவர்: மீண்டும் சர்ச்சையில் சங்கராபுரம் ஊராட்சி

ஊராட்சி அலுவலகத்தில் இரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டாடிய துணைத் தலைவர்: மீண்டும் சர்ச்சையில் சங்கராபுரம் ஊராட்சி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி இரவில் நண்பர்களுடன் துணைத் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஊராட்சியாக சங்கராபுரம் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு, ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேவி மாங்குடி, பிரியதர்ஷினி அய்யப்பன் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

இதுதொடர்பான வழக்கில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிரியதர்ஷினி அய்யப்பன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் தலைவர் பதவி காலியாக உள்ளது.

அதைதொடர்ந்து துனைத் தலைவர் தேர்தலில் பாண்டியராஜன் என்பவர் வெற்றி பெற்றார். தலைவர் இல்லாததால், அவரே பொறுப்பு தலைவராக உள்ளார். இந்நிலையில் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து காரைக்குடி பகுதிக்கு வந்த 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கரோனா தடுப்புப் பணிகளை காரைக்குடி பகுதியில் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு, துணைத் தலைவர் பாண்டியராஜன் பூட்டியிருந்த சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை இரவில் திறந்து நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

மேலும் சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை. கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க வேண்டிய ஊராட்சி துணைத் தலைவரே இரவு நேரத்தில் சமூக இடைவெளியின்றி பிறந்தநாள் விழா கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in