சென்னையில் இருந்து வருவோரால் தொடர் பாதிப்பு: தூத்துக்குடியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று

தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கோரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து வந்தவர்கள் பங்கேற்ற ஒரு திருமண நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடி பகுதியில் 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 ஆக இருந்தது. இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மாப்பிளை உள்ளிட்ட சிலர் சென்னையில் இருந்து வந்து பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் அந்த கிராமத்தை சேர்ந்த 8 பேருக்கும், தூத்துக்குடி நகரில் போல்டன்புரம், கணேஷ் நகர், லெவிஞ்சிபுரம் பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து வந்த தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த நேதாஜிநகரை சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரப் பகுதியில் மட்டும் புதிதாக 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய ஆய்வாளருக்கு 2 தினங்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்ய்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றில் இருந்து 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 19 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in