கரோனாவைக் காட்டி சம்பளப் பறிப்பா?- ஓசூரில் தென்மேற்கு ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர் ரயில் நிலைய வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்மேற்கு ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர்.
ஓசூர் ரயில் நிலைய வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்மேற்கு ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர்.
Updated on
1 min read

கரோனாவைக் காரணம் காட்டி கேரள அரசு வழியில், மாதம் 5 நாள் ஊதியம் என அடுத்த 18 மாதங்களில் 3 மாதச் சம்பளத்தைப் பறிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மேற்கு ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ரயில்வே மஸ்தூர் ஊழியர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் கருப்பு ஆடை மற்றும் பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஓசூர் ரயில் நிலைய வளாகத்தில் தென்மேற்கு ரயில்வே மஸ்தூர் ஊழியர் சங்கம், பெங்களூரு கோட்டம், தருமபுரி கிளை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மஸ்தூர் ஊழியர் சங்க தருமபுரி கிளைச் செயலாளர் ஜஸ்டின் ஜெபராஜ் தலைமை தாங்கினார். தருமபுரி கிளை துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடிகளைக் காரணம் காட்டி ஒருநாள் சம்பளம் பிடித்தம் மற்றும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 18 மாத விலைவாசிப் படி முடக்கம் ஆகியவற்றைக் கைவிட வேண்டும். ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி கேரள அரசு வழியில் மாதம் 5 நாள் ஊதியம் என அடுத்த 18 மாதங்களில் 3 மாதச் சம்பளத்தைப் பறிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்புச்சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்ட தென்மேற்கு ரயில்வே மஸ்தூர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in