Published : 08 Jun 2020 01:29 PM
Last Updated : 08 Jun 2020 01:29 PM

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் அவசர ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை. சிபிஎஸ்இக்கான பொதுத்தேர்வு ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் ஊரடங்கு முடியாத நிலையில், பொதுப்போக்குவரத்து தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுத் தேதி, பிளஸ் 2 வகுப்பின் எஞ்சிய ஒரு நாள் தேர்வுத் தேதியை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர்களின் மனநலன், உடல் நலன் குறித்த புரிதல் இன்றி தன்னிச்சையாக இப்படி அறிவிப்பதா என்ற விமர்சனம் எழுந்தது.

தேர்வு அட்டவணையைத் திரும்பப் பெற வேண்டும், ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தபின் தேர்வு நடத்த வேண்டும், ஊரடங்கு விலக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு அதன் பின்னர் 15 வகுப்பு நாட்கள் அந்த மாணவர்கள் வருவதை அனுமதித்துவிட்டு அதன் பின்னர்தான் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வை நடத்தியே தீர்வது என அரசு மும்முரமாக இருக்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்வை ஒத்தி வைக்கவேண்டும், மாணவர்கள் உயிரோடு விளையாட வேண்டாம் எனக் கடுமையாக எச்சரித்து அறிக்கையும் விட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றம் மாணவர்கள் தலை மீது கத்தி தொங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது. ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது, ஜூலையில் நடத்தலாமா என பதில் சொல்லுங்கள் என்று தமிழக அரசை எச்சரித்துள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் துறை சார்ந்த செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து அவர் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வைத் தள்ளிவைக்கும் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x