Published : 08 Jun 2020 01:00 PM
Last Updated : 08 Jun 2020 01:00 PM

144 தடையை மீறி உள்ளிருப்புப் போராட்டம்: வேலூர் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் கைது

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர். அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுகவினர். அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுகவினர்.

வேலூர்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. பல ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின் மோட்டார்கள் மாயமான நிலையில் அதை சரி செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனமான நடவடிக்கையைக் கண்டித்து அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏவும் வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் உள்ளிட்டோர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனிமனித இடைவெளியுடன் இன்று (ஜூன் 8) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெளியே ஏராளமான திமுகவினர் திரண்டிருந்ததால் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செந்தில்வேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "ஊராட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நானே நேரில் ஆய்வு செய்து எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் ஒரு வாரத்தில் சரி செய்துகொடுக்கிறேன்" என்று உறுதியளித்தார்.

இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் திமுக எம்எல்ஏக்கள் நந்தகுமார், வில்வநாதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி கைது செய்தனர்.

இதுகுறித்து ஏ.பி.நந்தகுமார் கூறும்போது, "அணைக்கட்டு ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஆய்வு நடத்தி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். பல ஆழ்துளை கிணறுகளில் தரம் குறைந்த மின் மோட்டார்களை பயன்படுத்துவதால் விரைவில் பழுதடைந்துவிடுகிறது. எனவே, வரும் நாட்களில் தரமான கம்பெனிகளின் மின் மோட்டார்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன்.

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.10 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. இந்த நிதியில் இருந்து நடைபெறும் பணிகள் குறித்து அனைத்தும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்று கூறியுள்ளேன். அதேபோல், நாகநதியின் குறுக்கே ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் குறித்த தகவலை தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் எனக்கு தகவல் அளிக்கவில்லை. இதைக் கண்டித்து திமுகவினர் புதிய பாலத்தின் அருகில் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x