

கரோனா தொற்றைப் பயன்படுத்தி நூதன முறையில் மோசடி செய்ய முயன்ற நபர் திரைப்பட நடிகர் ஒருவரை ஏமாற்ற முயன்றபோது அவர் கேட்ட சாமர்த்தியமான கேள்வியால் மாயமானார். நூதன ஏமாற்று குறித்து பொதுமக்களை எச்சரித்து டிக்டாக் காணொலி வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுரேஷ். தற்போது குரோம்பேட்டையில் வசிக்கிறார். சினிமாவில் நடிக்கும் ஆவலில் சென்னை வந்தவர் சென்னையில் வருமானத்திற்காக சொந்தமாக காய்கறி கடை நடத்திவருகிறார். அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான மான்குட்டி படத்தில் நடித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன் அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர்கள் சுரேஷின் தொழில் மற்றும் வருமான விபரங்களை கேட்டுள்ளனர். சில கேள்விகளை சுரேஷ் கேட்டவுடன் அவர்கள் இணைப்பை துண்டித்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு மீண்டும் போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் மீண்டும் சுரேஷிடம் அதேக் கேள்வியைக் கேட்க அவர் திருப்பிக் கேட்ட ஒரு கேள்வியை அடுத்து இணைப்பைத் துண்டித்துவிட்டு ஓட்டம் பிடித்தார். அவர்கள் இடையே நடந்த போன் உரையாடல்:
மோசடி நபர்: ஹலோ
சுரேஷ்: வணக்கம் சொல்லுங்க சார்.
மோசடி நபர்: என்ன வேலை செய்துகிட்டிருக்கீங்க.
சுரேஷ்: வெஜிடெபிள் ஷாப் வைத்திருக்கிறோம்.
மோசடி நபர்: ஓக்கே சார், இப்ப பார்த்தீங்கன்னா உங்களுக்கு வருமானம் எதுவும் இல்லாத காரணத்தால் மோடிஜி அரசு ரூ.5500 மோடி மூலமாக கரோனா வைரஸ் வந்ததால் உங்களுக்கு கொடுக்கப்படுது, உங்கள் அக்கவுண்டில் போட்டுவிடலாமா?
சுரேஷ்: எங்க அக்கவுண்ட்டில் பணம் போடப்போகிறீர்களா?
மோசடி நபர் : ஆமாம் சார் 5000 ரூபாய் போடுவோம். அக்கவுண்டில் போடலாமா? வேண்டாமா?
சுரேஷ்: அக்கவுண்ட்ல போடுங்க சார், நீங்க எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள், மோடிஜி பக்கத்திலிருந்து பேசுகிறீர்களா அல்லது தூரத்திலிருந்து பேசுகிறீர்களா?
மோசடி நபர்: சென்னை நுங்கம்பாக்கம் ஹெட் ஆஃபிசிலிருந்து பேசுகிறேன்.
சுரேஷ்: நுங்கம்பாக்கத்திலிருந்து பேசுகிறீர்களா? பிரதமர் மோடி பக்கத்தில் இருக்கிறாரா?
மோசடி நபர் : பக்கத்தில் இருக்கிறார் பேசுகிறீர்களா?
சுரேஷ்: கொடுங்க
மோசடி நபர் : இந்தாங்க மோடி சார் பேசுங்க (இணைப்பு துண்டிக்கப்படுகிறது)
சுரேஷ் சாமர்த்தியமாக கேட்டதால் தங்கள் மோசடி எடுபடாது என்று அவர்கள் போனை துண்டித்துவிட்டனர். ஆனால் கரோனா நேரத்தில் கையில் பணமில்லாத நிலையில், அல்லது பணமிருந்தும் அரசு பணம் போடுகிறதே என்கிற ஆசையில் வங்கி கணக்கு விபரங்களை கூறியிருந்தால் வாடிக்கையாளரின் பணம் அனைத்தையும் சுருட்டி இருப்பார்கள். பொதுவாக இவ்வாறு ஏமாற்றும் நபர்கள் வட மாநில நபர்களாக இந்தி கலந்த தமிழில் பேசுவார்கள். இம்முறை பேசிய நபர் நன்றாக தமிழ் பேசுகிறார்.
அவர்கள் பேசிய ஆடியோவை வெளியிட்டு, காணொலி மூலமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அவரது எச்சரிக்கைப்பதிவு, “வணக்கம் நான் சுரேஷ். நெல்லையைச் சேர்ந்தவன். சென்னை குரோம்பேட்டையில் வசிக்கிறேன். திரைப்பட நடிகராக உள்ளேன். எனக்கு வந்த போன் காலில் வேலை, வங்கி விபரங்களை கேட்டார்கள். மத்திய அரசு வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக ஆசைக்காட்டினார்கள்.
மெதுவாக பேசி வங்கி விபரங்களைப் கேட்டனர். நான் உஷாராகி கேள்வி எழுப்பியவுடன் உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டனர். நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் கரோனா பேரிடர் காலத்தில் நமது நிலையைக் காரணம் காட்டி நம்மை ஏமாற்ற இதுபோன்ற கால்கள் வரும். விஷயம் தெரியாதவர்கள் இதற்கு இரையாகிவிடக்கூடாது என்பதற்காக இதை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.