

கோவையின் முத்தண்ணன் குளம் பகுதியில், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களைக் காலி செய்யும் நடவடிக்கை எனும் பெயரில் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து கோவை மார்க்சிஸ்ட் எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை மாநகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்று முத்தண்ணன் குளம். இதன் கரையோரம் குமாரசாமி காலனி உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை ஆக்கிரமிப்புகள் என்று கூறிய மாநகராட்சி நிர்வாகம், அவற்றை இடிக்கும் பணிகளை ஜூன் 6-ல் தொடங்கியது. பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்றும் இடிப்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், கோவை எம்.பி.யான பி.ஆர்.நடராஜன் தலைமையில் பல்வேறு கட்சியினர், இப்பகுதியின் பிரதான சாலையில் அமர்ந்தும், பொக்லைன் இயந்திரங்கள் முன்பு அமர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இடிப்புப் பணிகளை நிறுத்திவிட்டு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“மாற்று இடம் வழங்கப்படாதவர்களின் வீடுகளை இடிக்கக் கூடாது. இப்பகுதியிலேயே (நகரப் பகுதியில்) மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்” என்று அதிகாரிகளிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து இது சம்பந்தமாகச் செவ்வாயன்று (ஜூன் 9) கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும் என்றும் அதுவரை வீடுகள் இடிக்கப்பட மாட்டாது என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து எம்.பி. பி.ஆர்.நடராஜன் கூறுகையில், “இப்பகுதியில் உள்ள மக்களுக்குப் புறநகர்ப் பகுதிகளில் மாற்று இடம் வழங்கப்படுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மாற்று இடம் வழங்கப்படாதவர்களுக்கு நகரப் பகுதிகளில் மாற்று இடம் வேண்டும். நகரத்தை அழகுபடுத்துகிறோம் என்கிற பெயரில் உழைப்பாளி மக்களை வெளியேற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நகரின் வளர்ச்சிக்குக் காரணமே இந்த உழைப்பாளி மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாத அமைச்சர்கள் ஆட்சியில் இருப்பதுதான் வேதனை. இப்போதைக்குப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்துள்ளோம். செவ்வாய்க்கிழமை ஆட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்றும் நம்புகிறோம். அப்படி உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் தொடரும்”என தெரிவித்தார்.
இதற்கிடையே, ‘கரோனா தொற்று பரவாமல் இருக்க கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் நேற்றுதான் கூட்டாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், “இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் மக்களுக்குத்தான். அரசு நிர்வாகத்திற்குப் பொருந்தாது என்பதை நிரூபிப்பதைப் போல் இருக்கிறது காவல் துறையினரின் நடவடிக்கை. இன்று எங்கள் காலனியில் வசிக்கும் மக்களின் வீடுகளை அகற்ற நூற்றுக்கணக்கான போலீஸார் எவ்வித இடைவெளியும் இல்லாமல்தான் அணிவகுத்து வந்தனர். எங்கள் மீது அடக்குமுறையை ஏவினர். ஊருக்குத்தான் உபதேசம் போலும்” என்று அப்பகுதி மக்கள் அதிருப்தியில் பேசுவதையும் பார்க்க முடிந்தது.