Published : 14 Sep 2015 07:00 PM
Last Updated : 14 Sep 2015 07:00 PM

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சபதமேற்போம்: கட்சியினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அண்ணா பிறந்த நாளில் கட்சி தொண்டர்கள் சபதமேற்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தன் வாழ்வின் இலக்காக கொண்டு அதை அடைய தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தவர் அண்ணா.

புத்துலகம் படைத்திட புதிய பாதை அமைக்க வேண்டிய அவசியம் உணர்ந்து புதிய அரசியல் இயக்கத்தை அண்ணா படைத்தார்.

அண்ணாவின் மறைவிற்குப் பின் ஏற்பட்ட அசாதாரண சூழலில் எம்ஜிஆரின் கருணையால் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தவர்கள் இயக்கத்தை தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டனர்.

அண்ணா மீது கொண்ட அன்பு, தமிழக மக்களின் முன்னேற்றத்தின் மீது கொண்ட அக்கறையால், ‘அதிமுக’ வை எம்ஜிஆர் உருவாக்கினார்.

எம்ஜிஆரால் பொதுவாழ்விற்கு அழைத்துவரப்பட்ட நான், அண்ணாவின் கொள்கை, எம்ஜிஆரின் தன்னலமற்ற லட்சியங்களையும் என் வாழ்வின் இரு கண்களாக கொண்டு அதிமுகவை வழிநடத்தி வருகிறேன்.

மக்கள் நலன்களை காப்பதிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்பதிலும், பெண் கல்வியை வளர்ப்பதிலும் எல்லோருக்கும் வாழ்வில் இன்பங்கள் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அதிமுக அரசு நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, உயர வேண்டும். அந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ரூ. ஒரு லட்சம் கோடி முதலீடுகள் என்ற இலக்குடன் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கான முதலீடுகள் உறுதிப்படுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட ஒட்டு மொத்த முதலீடுகளை விட இந்த 2 நாட்களில் பெறப்பட்ட முதலீடுகள் அதிகம்.

எண்ணற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை இந்த மாநாடு உருவாக்கி தந்துள்ளது.

அதிமுக அரசு நிகழ்த்தி இருக்கும் சாதனைகளை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வது என்பதே தலையாய பணி என, அண்ணாவின் பிறந்த நாளில் சபதம் ஏற்பீர்'' என முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x