Published : 08 Jun 2020 12:01 PM
Last Updated : 08 Jun 2020 12:01 PM

புதுச்சேரியில் இன்று கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறப்பு- பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரி

செ.ஞானபிரகாஷ் / கரு.முத்து

தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கோயில்கள் இன்று (ஜூன் 8) திறக்கப்பட்டன. மசூதிகள், தேவாலயங்கள் மால்களும் திறக்கப்பட்டன. வரிசையில் நின்று இறைவனை பக்தர்கள் தரிசித்தனர்.

கரோனா ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் முழுமையும் அமலானது. அதைத்தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் இன்று முதல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மதவழிபாடு இடங்கள், மால்கள் திறக்க அனுமதி தரப்பட்டது. அதன்படி இன்று காலையில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. காலையில் பக்தர்கள் வரிசையின் நின்று இறைவனை தரிசித்தனர்.

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில், காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோயில் உட்பட பெரும்பாலான கோயில்கள் இன்று காலை எட்டுமணி முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டன. பக்தர்கள் வழிபட பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும், கோயிலை விட்டு வெளியேறும் வரை முகக்கவசத்தை அகற்றக்கூடாது, கோயில் வாசலில் சோப்பு போட்டுக் கைகளை நன்கு கழுவிய பிறகுதான் உள்ளே நுழைய வேண்டும், குறைந்தது ஆறு அடி தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

காலை எட்டு மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். தினப்படிப் பூஜைகளைத் தவிர அர்ச்சனைகள், அபிஷேகம் போன்றவை நடைபெறாது. பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்தம் உள்ளிட்டவை வழங்கப்பட மாட்டாது என்று காரைக்கால் கைலாசநாதர் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

சளி, இருமல், காய்ச்சல், உடல் நலக் குறைவு உள்ளோர், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிப் பெண்கள், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பக்தர்களின் நலன் கருதி வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கோயில்களைப் பொறுத்தவரை தற்போது மூலவர் மற்றும் உற்சவர் தரிசனத்துக்கு மட்டுமே நடை திறக்கப்பட்டுள்ளது. தீபாராதனை, அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம், இதர பூஜைகள், உற்சவங்கள், திருமணம் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை. நான்கு கால பூஜைகள் வழக்கம்போல பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறின்றி நடக்கின்றன.

தரிசனத்துக்கு பிறகு கோயில் உட்புறமோ, வெளியிலோ ஐந்து பேருக்கு மேல் ஒன்றாக கூடி பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். கோயிலில் யாராவது நோயில் பாதிக்கப்பட்டிருப்பதாக அச்சமாக உணர்ந்தால் உடன் தகவல் தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்ச்சுகளில் அமரும் இருக்கைகளில் கயிறு கட்டி தனிமனித இடைவெளி பேணப்படுகிறது.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் அனுமதி
அதேபோல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஹோட்டல் இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகள் வரை அனுமதிப்பதாகத் தெரிவித்தனர். தங்கும் விடுதிகளில் தங்குவோரின் பயண விவரம் உட்பட அனைத்து விவரங்களையும் சேகரிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கின்றனர். ஷாப்பிங் மால்களைப் பொறுத்தவரை ஏசி அளவு தொடங்கி, எவ்வளவு பேர் வரை அனுமதிக்கலாம் என்பதுவரை விரிவான உத்தரவு தரப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இதர செயல்படாத பிரிவுகளும் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புனித நூல்களைத் தொட அனுமதி தரப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x