

கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்.து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசுவில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் சேவல்கட்டு மிக பிரசித்திமானது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சேவல்கட்டில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இருவர் உயிரிழந்ததையடுத்த 5 ஆண்டுகளுக்கு பூலாம்வலசு சேவல்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்தாண்டு (2019) நீதிமன்ற அனுமதி பெற்று நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு சேவல்கட்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிகழாண்டு பொங்கல் பண்டிகையின்போது நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சேவல்கட்டு நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி பணம் கட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுகின்றன. போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது பணம் கட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடைபெற்று வந்தது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், கரூர் அருகே நேற்று (ஜூன் 7) சட்டவிரோதமாக சேவல் காலில் கத்தி கட்டி நடந்த சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தியதில் படுகாயமடைந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் சின்னமுத்தாம்பாளையம் நடுக்கல்குட்டையில் அனுமதியின்றி சட் டவிரோதமாக சேவல் காலில் கத்தியைக் கட்டி சேவல் சண்டை நேற்று நடத்தப்பட்டுள்ளது. இதில் மேல்நெடுஞ்கூரை சேர்ந்த முருகேசன் (30) சேவல்களை சண்டைக்கு விடும் ஜாக்கியாக இருந்துள்ளார். சேவல்கள் காலில் கத்தி கட்டி சண்டைக்கு விடப்பட்டுள்ளன.
அப்போது ஒரு சேவல் காலில் கட்டியிருந்த கத்தி முருகேசன் தொடையில் குத்தியதில் படுகாயமடைந்த முருகேசனின் உடலில் இருந்து ரத்தம் அதிகளவு வெளியேறியுள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்ற முருகேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக க.பரமத்தி போலீஸார் 5 பேர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்து சண்முகம் (62), விமல்குமார் (36), ஜெயசந்திரன் (47), சுமன் (37) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான சக்திவேல் என்பவரை தேடி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக நடந்தப்பட்ட சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.