

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் நகராட்சி மின் மயானமான 'முக்தி'யில் நேற்று இரவு எரியூட்டப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் வேரமாக பரவி வருகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் பலருக்கும் கரோனா வைரஸ் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோன்று, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா வைரஸ் பரவியது. இப்படி மாவட்டம் முழுவதும் 380 பேருக்கு கரோனா வைரஸ் பரவியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இம்மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர், அரிசி வியாபாரி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று பூரண குணடைந்து வீடு திரும்பி வந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் அருகே தி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூன் 7) காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், வந்த சோதனை முடிவில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 7) மாலை 6 மணி அளவில் திடீரென மூச்சித்திணறல் ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட வருவாய்துறையினர் காவல்துறையினர் இணைந்து கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை நேற்று இரவு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் விழுப்புரம் நகராட்சி மின் மயானமான 'முக்தி'யில் எரியூட்டப்பட்டது.
இறந்த மூதாட்டியின் 2-வது மகனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு அளிக்க வெளியூர்களுக்கு சென்று வந்ததால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். அதேபோன்று, இவரிடமிருந்து யாருக்காவது பரவியுள்ளதா என்று அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியலை வருவாய்துறையினர் தயாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்ததால், கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்பை மாவட்ட நிர்வாகம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.