இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ‘ஆஸ்ட்ரோசாட்’ 28-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ‘ஆஸ்ட்ரோசாட்’ 28-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
Updated on
1 min read

இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ‘ஆஸ்ட்ரோசாட்’ வருகிற 28-ம் தேதி பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-டி-6 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில், இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக் கோளான ‘ஆஸ்ட்ரோசாட்’ செயற்கைக் கோளை வருகிற 28-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது.

ஒன்றரை டன் எடை கொண்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளுடன் கனடா மற்றும் இந்தோனேசியாவின் 2 சிறிய செயற்கைக் கோள்கள், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 6 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளானது, புறஊதாக்கதிர்கள் மற்றும் எக்ஸ்-ரே கதிர் மண்டலங்கள் கொண்ட விண்வெளிப் பகுதியை ஆய்வு செய்யும். பால்வெளி வீதியில் இருப்பதாக நம்பப்படும் கருந்துளை குறித்தும் அது ஆராயும்.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளன. ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்படும் பட்சத்தில் இந்த பட்டியலில் இந்தியா 4-வது நாடாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in