

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் மீன் இறங்கு தளப் பகுதிகளில் பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அதிகஎண்ணிக்கையில் குவிந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. இதனால் அப்பகுதியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
200 புதிய கடைகள்
இதைத் தொடர்ந்து, மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் புதிதாக 200 கடைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கடையைச் சுற்றிலும்தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன.
இந்தக் கடைகளில் நேற்று சில்லறை வியாபாரிகள் வரிசை யில் நின்று மீன்களை வாங்கி சென்றனர். ஆனால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 5 மணிக்கு விற்பனை தொடங்கி 11 மணியுடன் நிறைவடைந்தது. சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அலைமோதிய மக்கள் கூட்டம்
இதற்கிடையே, நொச்சிக்குப்பம் மீன் சந்தையில் நேற்றுவழக்கம்போல் மீன் விற்பனைநடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாகஇருந்தது. சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. இதேபோல் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் கூட்டம் அலைமோதியது.